×

லைசென்ஸ் இல்லாமல் டிராக்டர் ஓட்டி விபத்து கூரியர் உதவியாளருக்கு 4.76 லட்சம் நஷ்டஈடு: சென்னை வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: ராயப்பேட்டையை சேர்ந்தவர் செய்யது அகமது. இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள கூரியர் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2013 மே 27ம் தேதி செய்யது அகமது தனது நண்பர்கள் முகமது ஷரீப் மற்றும் அஜீஸ் ஆகியோருடன் ஒரே பைக்கில் மப்பேட்டில் இருந்து சுங்குவார்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். செய்யது அகமது பின்னால் நடுவில் இருந்துள்ளார். அப்போது, எதிரே வந்த டிராக்டர் பைக்கில் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செய்யது அகமது படுகாயமடைந்தார்.
போலீஸ் விசாரணையில் டிராக்டர் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சிதம்பரம் திருவள்ளூரை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.இந்நிலையில், தனக்கு 12 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னை வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது சார்பில் வக்கீல் வி.எஸ்.சுரேஷ் ஆஜராகி, விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநரிடம் லைசென்ஸ் இல்லை. அவரது கவனக்குறைவால்தான் விபத்து ஏற்பட்டது என்று வாதிட்டார். இதற்கு டிராக்டர் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.  வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரருக்கு 5 லட்சத்து 29 ஆயிரத்து 330 இழப்பீடு தொகை கணக்கிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 3 பேர் அமர்ந்து பைக்கில் கவனக்குறைவாக மனுதாரர் சென்றுள்ளார். எனவே, கணக்கிடப்பட்ட இழப்பீடு தொகையில் 10 சதவீதம் அவரது கவனக்குறைவுக்காக கழிக்கப்பட்டு 90 சதவீத இழப்பீடு தொகையான  4 லட்சத்து 76 ஆயிரத்து 400 இழப்பீடு வழங்க டிராக்டர் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரின் லைசென்ஸ் 2001ல் காலாவதியாகிவிட்டது. அதை அவர் புதுப்பிக்கவில்லை. எனவே, இழப்பீடு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம்  டிராக்டர் உரிமையாளர் மற்றும் ஓட்டுனரிடம் வசூலித்துக்கொள்ளலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Accident ,Chennai Vehicle Accident Tribunal ,Courier Assistant for Tractor , Tractor-driven ,accident, courier assistant, Tribunal orders
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...