×

மணப்பாறை அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான் 100 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவன் சுஜித்தை மீட்க தீவிரம்

* கயிறு கட்டி மேலே தூக்க நடந்த முயற்சி தோல்வி
* தலையில் மண் விழுந்து மூடியதால் அதிர்ச்சி
* சுரங்கம் தோண்டி மீட்க 3 வீரர்கள் தயார்

மணப்பாறை: மணப்பாறை அருகே சோளக்காட்டில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் சுஜித் 100 அடி ஆழத்துக்குள் சென்றுவிட்டான். ஒரு நாளை கடந்தும் மீட்பு பணி தொடர்ந்து தீவிரமாக நடக்கிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ் (40). கொத்தனார். இவரது மனைவி கலாமேரி (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் சுஜித் வில்சன் (2). இவர்களது வீட்டுக்கு அருகில் 25 அடி தூரத்தில் ஆரோக்கியராஜின் அண்ணன் வேளாங்கண்ணி என்பவரின் வீடு உள்ளது. ஆரோக்கியராஜுவுக்கு சொந்தமாக வீடு அருகிலேயே விவசாய நிலம் உள்ளது. இதற்காக 5 ஆண்டுகளுக்கு முன் 600 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தனர். ஆனால் தண்ணீர் வராததால், அதை அப்படியே விட்டு விட்டனர். அதன்மேல் பகுதியை பிளாஸ்டிக் கப் மூடி போட்டு மூடி இருந்தனர். இந்த நிலத்தில் சோளம் பயிரிட்டிருந்தனர். இப்போது 1 அடி உயரத்துக்கு சோளப்பயிர்கள் வளர்ந்திருந்தது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை 5.40 மணியளவில் குழந்தை சுஜித், அருகில் உள்ள தனது பெரியப்பா வேளாங்கண்ணி வீட்டுக்கு சோளக்காடு வழியாக நடந்து சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணறு மூடி மீது கால் வைத்து விட்டான். இதில் மூடி உடைந்து ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். சுஜித்தின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டிற்கு வெளியே இருந்த தாய் கலாமேரி மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். அப்போது குழந்தை குழியில் விழுந்து அழுது கொண்டிருந்தான். அதைப்பார்த்து தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மணப்பாறை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 4 பொக்லைன்கள் வரவழைக்கப்பட்டு ஆழ்துளை குழாய் அருகே பள்ளம் தோண்டும் பணி நடந்தது. ஆழ்துளைக்குள் சிறுவனுக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. தொடர்ந்து சுஜித் எத்தனை அடியில் சிக்கி உள்ளான் என்பதை பார்த்தபோது 22 அடியில் சுஜித் சிக்கியிருப்பது தெரியவந்தது. மீட்பு பணிக்காக அந்த இடத்தில் மின் விளக்கு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அருகில் பள்ளம் தோண்ட தோண்ட அதிர்வு காரணமாக குழந்தை கீழே சென்று கொண்டிருந்தான். இதனால் சுமார் 15 அடிக்கு பள்ளம் தோண்டியிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பள்ளம் தோண்டுவது நிறுத்தப்பட்டது. கயிற்றில் சுருக்கு ஏற்படுத்தி அதை குழந்தையின் கையில் சிக்க வைத்து மேலே இழுத்து விடலாம் என 3 முறை முயற்சித்தனர். அதுவும் பலனளிக்கவில்லை. இதனிடையே குழந்தையின் தாய் கலாமேரி ஆள்துளை கிணற்றின் அருகில் அமர்ந்து அவ்வப்போது குழந்தையிடம் சத்தமாக பேசினார். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் குழந்தையிடம் இருந்து அப்பா என்ற சத்தம் கேட்டது. அதன்பிறகு சத்தம் வரவில்லை. இதன்பிறகு குழந்தையின் தலை மீது மண் சரிந்து விழுந்துள்ளது. இதனால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதையடுத்து, குழந்தையின் அசைவுகளை அறிந்து கொள்ளும் வகையில் தீயணைப்பு துறையினர் நவீன கேமராவை  உள்ள செலுத்தி உள்ளனர். அதன்மூலம் வெளியில் இருந்து லேப்டாப், டி.வி. மூலம் குழந்தையின் அங்க அசைவுகளை கண்காணித்தனர். இதுதவிர, ஆழ்துளை கிணறு அருகே தாய் கலாமேரி மைக் மூலம், ‘‘அழாத ராசா கவலைப்படாதே’’ என்று ஆறுதல் வார்த்தை கூறிக்கொண்டிருந்தார். விடிய விடிய அவர் அழுததால் மயக்கம் ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்து குளுக்கோஸ் செலுத்தினர். இந்தநிலையில், மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து 33 வீரர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று காலை 9 மணிக்கு வந்தனர். அவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கயிறு மற்றும் ரோபோ கருவி மூலம் மீட்கும் பணியை தீவிரப்படுத்தினர். எனினும், குழந்தை சுஜித் தொடர்ந்து ஆழ்துளை கிணற்றில் கீழே சென்றான். மதியம் 70 அடி ஆழத்தில் இருந்த சுஜித், மாலையில் 100 அடி ஆழத்துக்கு சென்றான்.

இதனால், தேசிய பேரிடர் மீட்பு படை பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து, சென்னையில் இருந்து  தீயணைப்பு துறை இயக்குனர் காந்திராஜன் சம்பவ இடத்திற்கு வந்து  பார்வையிட்டு, குழந்தை விழுந்த போர்வெல் அருகே சுரங்கம் அமைத்து, அதில் தீயணைப்பு வீரரை இறக்கி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தை தற்போது 100 அடியில் உள்ளது. குழந்தை  விழுந்த போர்வெல் அருகே 120 அடி ஆழத்துக்கு ஒரு மீட்டர் அகலத்தில் ராட்சத போர்வெல் அமைப்பதற்கான பணி  துவங்கியது. இதில் இறங்கி குழந்தையை மீட்க தீயணைப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

மகனுக்காக துணி பை தைத்து கொடுத்த தாய்

குழந்தை சுஜித் குழிக்குள் விழுந்ததும் அவனது தாய் கலாமேரி, தவியாய் தவித்து வருகிறார். மகனை உயிருடன் மீட்டு தன்னிடம் கொடுப்பார்கள் என அவர் நம்பிக்கையில் இருந்து வருகிறார். இந்நிலையில் மீட்புக்குழுவினர் துணிப்பை ஒன்று இருந்தால் நல்லது. அந்த பைக்குள் சிறுவனை அமர வைத்து மீட்டு விடலாம் என்று கூறியுள்ளனர். உடனடியாக தனது வீட்டில் உள்ள தையல் எந்திரம் முன்பு உட்கார்ந்து கலாமேரி ஒரு துணியை எடுத்து பையை தைத்து கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்தது.

திக்..திக்..நிமிடங்கள்..

நேற்று முன்தினம் மாலை 5.40: குழந்தை சுஜித் குழியில் விழுந்தான்.
5.55: மணப்பாறை தீயணைப்பு குழு வருகை. அப்போது குழந்தை 5 அடி ஆழத்தில் இருந்தான்.
6.15: தாசில்தார் தமிழ்க்கனி தலைமையில் அலுவலர்கள் வருகை.
6.30: பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது.
இரவு 7.10: கலெக்டர் சிவராசு, எஸ்பி ஜியாவுல் ஹக் வருகை.
7.15: அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி வருகை.
7.50: மாவட்ட தீயணைப்பு அலுவலர் புழுகாண்டி வருகை.
8 மணி: மதுரையில் இருந்து ரோபோ வடிவமைத்த மணிகண்டன் குழுவினர் வந்ததால், பள்ளம் தோண்டுவது தற்காலிகமாக நிறுத்தம்.
8.10: மதுரை குழுவினர் ரோபோ மூலம் குழந்தையை தூக்க முயற்சி.
8.30: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருகை.
8.40 : மதுரை குழுவினரின் முயற்சி நிறுத்தம்
9.00: மீண்டும் பள்ளம் தோண்டும் பணி துவக்கம்.
9.30: அதிர்வால் குழந்தை தொடர்ந்து குழிக்குள் இறங்கிக்கொண்டே இருந்ததால், பள்ளம் தோண்டுவது நிரந்தரமாக நிறுத்தம்.
9.30 முதல் அதிகாலை 4 மணி வரை: நாமக்கல், கொத்தமங்கலம் குழுவினர் மாறி மாறி கயிறு மூலம் சுருக்கு ஏற்படுத்தி மீட்க முயற்சி.
நேற்று அதிகாலை 4.30: 30 அடி ஆழத்தில் இருந்த குழந்தையிடமிருந்து கடைசியாக அப்பா என்ற முனகல் சத்தம் கேட்டது.
காலை 9 மணி அரக்கோணத்தில் இருந்து 33 வீரர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்தனர்.
காலை 10 மணி கயிறு கட்டி மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் முயற்சி.
பகல் 2 மணி குழந்தை சுஜித் 70 அடிக்கு சென்றான்.
இரவு 7 மணி  80 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு அமைத்து மீட்க முடிவு செய்து பணிகள் தொடங்க இருந்த நிலையில் குழந்தை 100 அடிக்கு சென்றான்.

நாகூர் தர்காவில் பிரார்த்தனை

சிறுவன்  சுஜித் உயிரோடு மீட்க வேண்டி உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில்  இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பெரியாண்டவர்  சன்னதியில் நடைபெற்ற பிரார்த்தனையில் சிறுவன் எந்த பாதிப்பின்றி உயிருடன்  மீண்டு வரவும், கயிறு கட்டி சிறுவனை தூக்கும் மீட்பு படையினரின் முயற்சி  தோல்வி அடையக் கூடாது என்பதற்காகவும் துவா செய்தனர். பிரார்த்தனையில்  50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், சாஹிபுமார்கள்  கலந்துகொண்டனர்.

சோதனை மேல் சோதனை

நடுகாட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித்தை மீட்கும்பணி நேற்று 2ம் நாளாக நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை 6.30 மணி அளவில் மீட்பு பணி துவங்கியது. இடைவெளி இல்லாமல் நேற்று காலை 11.50 மணி வரை நடந்து கொண்டே இருந்தது. சரியாக 11.50 மணிக்கு மழை தூறத்தொடங்கியது. உடனடியாக அங்கு தார்ப்பாய் கொண்டு வரப்பட்டு தற்காலிக கூடாரம் போல அமைத்து தொய்வின்றி பணிகளை மேற்கொண்டார்கள். ஏற்கனவே மீட்பு பணிக்காக பக்கவாட்டில் குழிதோண்டியபோது, அங்கு பாறையாக இருந்தது ஒரு பின்னடைவாக இருந்தது. இப்போது மழையும் ஒரு சோதனையாக அமைந்தாலும், அதை பொருட்படுத்தாமல் மீட்பு குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

கயிறு கட்டி மீட்கும் முயற்சி தோல்வி


ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பல்வேறு உபகரணங்களுடன் களத்துக்கு வந்த அவர்கள், மூன்று யுக்திகள் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் களமிறங்கினர். முதலாவதாக, ஏற்கெனவே சென்னைக் குழு கயிறு மூலம் கட்டி குழந்தையை மீட்க முயற்சி செய்ததைப் போல தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் குழந்தையின் இரண்டு கைகளிலும் கயிற்றைக் கட்டி மீட்க முயன்றனர். இரண்டரை மணிநேர முயற்சியில் குழந்தை சிறிதுதூரம் மேலே வந்த நிலையில் கயிறு நழுவியதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

காலம் கடத்திய தீயணைப்பு படையினர்

முதலில் தீயணைப்பு வீரர்கள் வந்தபோது குழந்தை 5 அடி ஆழத்தில்தான் இருந்தது. அப்போது கைகளை நீட்டியோ, கயிறு மூலமாகவோ சமயோசிதமாக யோசித்து செயல்பட்டிருந்தால் குழந்தையை மீட்டிருக்கலாம். டார்ச்லைட் அடித்து பார்ப்பது, மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பது என இப்படியே சிறிது நேரம் காலம் கடத்தி விட்டனர் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

8 கோடி இயந்திரம் வருகை

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் மீட்பு பணி குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி தெலங்கானா ஆளுநர் தமிழிசை கேட்டறிந்தார். பின்னர் குழந்தை உயிருடன் ஆரோக்கியமாக மீட்கப்பட இறைவனை வேண்டுவோம் என்று தமிழிசை தெரிவித்தார். அவரிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து ரூ.8 கோடி மதிப்புள்ள அதிநவீன இயந்திரம் வருகிறது. அந்த இயந்திரத்தின் மூலம் குழந்தையை மீட்க போடப்பட்டுள்ள துளைக்கு இணையாக பக்கத்திலேயே மீண்டும் ஒரு துளையிட்டு குழந்தையை மீட்க முடியும் என்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

1 மீட்டர் அகலத்தில் தோண்டுகிறார்கள்


மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன் என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழுக்கள் கைகோர்த்துள்ளது. இவர்கள் ரிக் வண்டி எனப்படும் போர்வெல் அமைக்கும் கருவி மூலம் சுஜித் சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றின் அருகே சுரங்கம் போன்ற குழி தோண்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆழ்துளை கிணற்றின் அருகே சில மீட்டர் தள்ளி 1 மீட்டர் ஆழம் மற்றும் அகலத்தில் சுரங்கம் தோண்டி அதை குறுக்காக ஆழ்துளை கிணற்றுடன் இணைக்கப்படவுள்ளது. பின்னர் அதில் ஒரு தீயணைப்பு வீரரை உள்ளே அனுப்பி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு சில மணிநேரங்கள் தேவைப்படும் என்பதால் சுஜித்தை மீட்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும்.

Tags : well ,Manapparai ,Sujith , Sujith falls,well ,600 feet deep
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...