×

தமிழக அரசு தடை, மழை மிரட்டல் எதிரொலி சென்னை, புறநகரில் பட்டாசு விற்பனை மந்தம்

சென்னை: கடந்த இரண்டு வருடமாக பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மொத்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதிகளவில் வெயில் இல்லாமல் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையால் பட்டாசு வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதலே சென்னையில் பல இடங்களில் பட்டாசு கடைகள் புதிதாக வைக்கப்பட்டிருந்தது. அதேபோன்று சென்னை தீவுத்திடல் மற்றும் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானங்களில் உள்ள கடைக்கு சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் இருந்து நேரடியாக கொண்டு வந்து விற்பனைக்காக வைத்துள்ளனர். ஆனால், இந்த கடைகளில் கடந்த சில நாட்களாக எதிர்பார்த்த அளவுக்கு பட்டாசு விற்பனை நடைபெறவில்லை என்று வியாபாரிகள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து சென்னை, தீவுத்திடலில் மொத்தமாக பட்டாசு கடை வைத்துள்ள வியாபாரிகள் சிலர் கூறியதாவது: சிவகாசியில் 100க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலைகள் அனைத்துமே தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கியே காத்திருப்பார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் புது புது உத்தரவுகளால் பட்டாசு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசுகள்தான் விற்பனை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். மேலும், தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று புது உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதில் சீன பட்டாசு ஊடுருவல் வேறு. இதுபோன்ற நடவடிக்கையால் பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 1000 கோடிக்கு பட்டாசு விற்பனை செய்வதற்காக இலக்கு நிர்ணயிக்கப்படும். இதில் சென்னையில் மட்டும் 250 கோடிக்கு பட்டாசு விற்பனையாகும். கடந்த காலங்களில் இந்த இலக்கை ஓரளவு எட்டினோம். இதனால் பட்டாசு வியாபாரிகள் வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருந்தது. இதன்மூலம் பல லட்சம் ஊழியர்களும் பயனடைந்து வந்தனர்.

ஆனால், மத்திய, மாநில அரசுகள் பட்டாசு வெடிக்க விதித்துள்ள தடை மற்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்த ஆண்டு பட்டாசு விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது. சென்னையில் எதிர்பார்த்த அளவுக்கு பட்டாசு விற்பனையாகவில்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் பட்டாசுகளை வாங்க மக்கள் கூட்டம் இல்லை. இதனால் இந்த ஆண்டு எதிர்பார்த்த வருவாய் பட்டாசு வியாபாரிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால், பல கோடி ரூபாய் இழப்பை பட்டாசு வியாபாரிகள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

Tags : Tamil Nadu ,suburbs ,Chennai , Fireworks sales , Chennai, suburbs,Tamil Nadu government ban
× RELATED ‘அப் கி பார்…சாக்கோ பார்…’ இணையத்தில் தீயாய் பரவும் பாஜ கோஷம்