×

பல லட்சம் பேர் வெளியூர் சென்றுவிட்டதால் சென்னையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடின

சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட பல லட்சம் பேர் வெளியூர் சென்றுவிட்டதால் சென்னையின் முக்கிய சாலைகளில் நேற்று அதிக வாகனங்கள் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னையில் வசிப்பவர்களில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள். தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல பஸ், ரயில்களில் கடந்த சில நாட்களாக கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து மட்டும் கடந்த ஒரு சில நாட்களில் ரயில், பஸ்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இதுதவிர கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பல லட்சம் பேர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வெளியூர் சென்றுள்ளனர். இப்படி பல லட்சம் பேர் வெளியூர் சென்றதால் சென்னையின் முக்கிய சாலைகளில் நேற்று காலையில் இருந்தே அதிக வாகனங்கள் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ள அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கடற்கரை பகுதியான காமராஜர் சாலை, பல்லாவரம் வழியாக ஓஎம்ஆர் வரையிலான ரேடியல் சாலை, வேளச்சேரி சாலை, மயிலாப்பூர், ராயப்பேட்டை, அடையாறு உள்ளிட்ட முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் மின்சார ரயில்களிலும் நேற்று கூட்டம் குறைவாக இருந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டதும் சாலைகளில் கூட்டம் குறைந்ததற்கு ஒரு காரணம். அதேநேரம், கோயம்பேட்டில் இருந்து வடபழனி, கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், செங்கல்பட்டு வழியாக திருச்சி, மதுரை, திருநெல்வேலி செல்லும் சாலைகளில் மக்கள் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் சென்றதால் நேற்று அதிக வாகன நெரிசல் ஏற்பட்டது.

Tags : roads ,Chennai , Chennai's main roads, ravaged ,lakhs have left
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...