×

தூய்மையான, சுகாதாரமான சென்னை 20 ஆயிரம் மாணவ தூதுவர்கள் மூலம் டிஜிட்டல் முறையில் பிரசாரம் : வீதி வீதியாக விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த முடிவு

சென்னை : “தூய்மையான, சுகாதாரமான சென்னை” என்ற திட்டத்தின் மூலம் மழைக்கால நோய்களை தடுக்க 20 ஆயிரம் தூதுவர்கள் கொண்டு டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிமாக உள்ளது. இதை தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. தினசரி சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு, சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருத்தல் உள்ளிட்டவைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மழைக்கால நோய்களை தடுக்க வீடுகளையும் வீதிகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த “தூய்மையான, சுகாதாரமான சென்னை” என்ற முயற்சியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. ஏற்கனவே சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுரையின் படி சென்னை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 20 ஆயிரம் பேர் சுகாதாரத் தூதுவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சுகாதாரத் தூதுவர்களை கொண்டு டிஜிட்டல் முறையில் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி CleanHealthChennai என்ற பெயரில் டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதில் நமது சுகாதாரத்தை நாமே பேணுவோம் என்ற தலைப்பில் சுகாதார தூதுவர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மாணவிகளான, சகிகலா தேவி, நவியா ஸ்ரீ, நந்திதா காந்தி ஆகியோர் இணைந்து பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், “மக்கள் தொகை அதிகமாக உள்ள நமது தலைநகரத்தில் நமது இருப்பிடங்களையும், சுற்று புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். நாம் சுகாதாரமாக இருந்தால் மட்டுமே மழைக்கால நோய்களை தடுக்க முடியும். இல்லாவிடில் பாதிப்பு சந்திக்க போவது உங்களது பிள்ளைகள்தான், தூய்மையான, சுகாதாரமான சென்னைக்காக விழிப்புணர்வு செய்ய நாங்கள் தயாராயிட்டோம். இது நமக்காக, நாட்டுக்காக, நாளைக்காக” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு வீடியோ அனைத்து முன்னணி செய்தி தொலைக்காட்சிகள், சென்னையிலுள்ள பிரதான திரையரங்குகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மழைக்கால நோய்தடுப்பு மற்றும் சுகாதாரமான சென்னையை வலியுறுத்தி மாநகராட்சி சார்பில் ஆட்டோக்கள் வழியாக 15 மண்டலங்களில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மழைக்கால நோய்களை தடுப்போம், டெங்கு கொசுக்களை ஒழிப்போம், பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதை தவிர்ப்போம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம், வீடுகளில் கழிவுநீர் மற்றும் தூயநீர் தேங்காமலும் ஒத்துழைப்போம்,  மழை நீரை சேகரிப்போம் ஆகியவற்றை வலியுறுத்தி சென்னையில் உள்ள 15 மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 20,000 மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வீதி வீதியாக நடத்தவும் மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் அருகே உள்ள வீதிகளுக்கு விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று வீட்டுக்கு வீடு துண்டு பிரசுரங்களை வழங்குவார்கள் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : student ambassadors ,Healthy Chennai , Clean, Healthy Chennai, 20 thousand student ambassadors
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...