×

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை வட, கடலோர மாவட்டங்களில் கனமழை

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால் வட, கடலோர மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி தொடங்கியது. அப்போது முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள கியார் புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சவுதி அரேபியா நோக்கி வருகிறது. இந்த புயலால் தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஆனால் வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 26.1 மி.மீ, சென்னை நுங்கம்பாக்கத்தில் 18.3 மி.மீ, தர்மபுரியில் 10 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதனால் வரும் நாட்களில் தென் தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்யும். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறினார்.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் கடல்பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் சூரைக்காற்று வீசக்கூடும். அதனால்  தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல், ெதன் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags : districts ,Southwest Bengal Sea ,North , Heavy rainfall,North and Coastal districts ,Southwest Bengal Sea
× RELATED நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின்...