×

மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜ.வுக்கு சிவசேனா நிபந்தனை

* இரண்டரை ஆண்டுக்கு பின் முதல்வர் பதவியை ஒப்படைக்க எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் போட வலியுறுத்தல்

மும்பை: மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜ- சிவசேனா இடையே கருத்து வேறுபாடு அதிகமாகி இருக்கிறது. ‘இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி, 50 சதவீத அமைச்சர்கள் பதவி வழங்கப்படும்’ என  எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் எழுதி கொடுக்க வேண்டும் என பாஜ.வுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிபந்தனை விதித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க இருக்கின்றன. ஆனால், ஆட்சியில் தங்களுக்கு முதல்வர் பதவி உட்பட அனைத்திலும் சமபங்கு கொடுக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறி வருகிறார். கடந்த ஏப்ரலில் மக்களவை தேர்தலின்போது பாஜ தலைவர் அமித்ஷா மும்பை வந்து உத்தவ் தாக்கரேயை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிசும் உடனிருந்தார்.

இதில், சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கீட்டிலும், ஆட்சி அதிகாரத்திலும் சிவசேனாவிற்கு சமபங்கு கொடுக்கப்படும் என்று அமித்ஷா தெரிவித்தார். அதன் பிறகுதான், உத்தவ் தாக்கரே மக்களவை தேர்தலில் பாஜ.வுடன் கூட்டணி அமைக்க சம்மதம் தெரிவித்தார். தற்போது, சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அமித்ஷா சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கூறி வருகிறார். இது தொடர்பாக நேற்று முன்தினம் உத்தவ் தாக்கரேயுடன் அமித் ஷா பேச திட்டமிட்டார். ஆனால், உத்தவ் தாக்கரே தனது நிலையில்  இருந்து இறங்கி வராத காரணத்தால் பேசவில்லை. விரைவில் அமித் ஷா மும்பை வந்து உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேச இருக்கிறார். இந்நிலையில், சிவசேனா எம்எல்ஏ.க்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. தாதரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ.க்கள்,
உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், ஆட்சியமைப்பது தொடர்பான முடிவுகளை எடுக்க, உத்தவ் தாக்கரேவுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசிய விவரங்கள் பற்றி சிவசேனா எம்எல்ஏ.வா பிரதாப் சர்நாயக் கூறியதாவது: எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, ‘ஆட்சி அமைப்பதற்கான மாற்றுத் திட்டமும் என்னிடம்  இருக்கிறது. ஆனால், கொள்கை அளவில் சிவசேனாவும், பாஜ.வும் கூட்டணி வைத்துள்ளன. அதை முறிக்க விரும்பவில்லை. ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் முன்பாக, அமித் ஷா முன்னிலையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, பாஜ கூட்டணி ஆட்சியில் சிவசேனாவுக்கு சமபங்கு கொடுக்கப்பட வேண்டும். அது தொடர்பாக, பாஜ எழுத்துப்பூர்வமாக எழுதி உத்தரவாதம் கொடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். பாஜ இந்த எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை கொடுத்த பிறகுதான், அக்கட்சியுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும். நாங்கள் குறைவான தொகுதியில் போட்டியிட்டோம்.  எம்எல்ஏ.க்கள் பதவியேற்பு முடிந்த பிறகு சிவசேனா சட்டப்பேரவை தலைவர் தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா 63 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அது 56 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதை சுட்டிக்காட்டி, அக்கட்சியுடன் பாஜ பேரம் நடத்த முயற்சி செய்கிறது. ஆட்சியில் சிவசேனா சமபங்கு கேட்டிருப்பது குறித்து பாஜ.வை சேர்ந்த மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தன்வே கூறியதாவது: தீபாவளி முடிந்த பிறகு முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், ஆட்சி அமைப்பது குறித்து உத்தவ் தாக்கரேயுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். ஆனால், தேர்தல் முடிவு வெளியான அன்று உத்தவ்தாக்கரே அளித்த பேட்டியிலும், ‘அமித் ஷா, நான், முதல்வர் பட்நவிஸ் இடையே செய்து கொண்ட 50:50 பார்முலாபடி ஆட்சி அமைய வேண்டும். நாங்கள் மக்களவை தேர்தலில் குறைவான இடங்களில் போட்டியிட்டோம்’ என்று தெரிவித்தார்.

சிவசேனா சொல்லும் பார்முலாப்படி முதல்வர் பதவியை இரு கட்சிகளும் சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், முதல்வர் பதவி விவகாரத்தில் வேறு பேச்சுக்கே இடமில்லை என்று பாஜ தெரிவித்துள்ளது. இதனால், சிவசேனா ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவு கொடுப்பது குறித்து செய்திகள் அடிபடுகிறது. ஆனால், சரத் பவார் ஏற்கனவே அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, வரும் 30ம் தேதி பாஜ எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இத்தகவலை பாஜ.வின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 15 பேருடனும், சிறிய கட்சிகளுடனும் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Tags : Maharashtra ,BJP ,Shiv Sena ,coalition government , Shiv Sena, BJP ,government in Maharashtra
× RELATED ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை களம் இறக்கியது பா.ஜ