×

மணப்பாறை அருகே பரபரப்பு,.. 500 அடி போர்வெல் துளையில் தவறி விழுந்த 2 வயது சிறுவன்: உயிருடன் மீட்க தீயணைப்புத்துறையினர் போராட்டம்

மணப்பாறை: மணப்பாறை அருகே 500 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவனை உயிருடன் மீட்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டி பகுதியில் வேளாங்கண்ணி என்பவருக்கு சொந்தமான சோளக்காட்டில்  500 அடி ஆழத்தில்  ஆழ்துளை கிணறு (போர்வெல்) பயன்பாடின்றி கடந்த 4 ஆண்டாக பிளாஸ்டிக் மூடி போடப்பட்டு இருந்தது. தற்போது பெய்து வரும் மழைக்கு சோளச்செடி வளர்ந்துள்ளது. சோளக்காட்டுக்கு அருகிலேயே வேளாங்கண் ணியின் தம்பி கொத்தனார் பிரிட்டோ ஆரோக்கியராஜ் (40), மனைவி கலாமேரி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். இவர்களில் 2-வது மகன் சுஜித்வில்சன் (2).
இவன் நேற்று மாலை 5.45 மணியளவில் வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக சோளக்காட்டில் நடந்து சென்றுள்ளான்.

சோளக்காட்டு வழியே நடந்து சென்றபோது, ஆழ்குழாய் கிணற்றின் மேல்  பகுதியில் போடப்பட்டிருந்த மூடியில் கால் வைத்தபோது உடைந்தது. இதில் திடீரென சுஜித் உள்ளே தவறி விழுந்தான். விழும்போது கூச்சலிட்டவாறு விழுந்ததால் வீட்டிற்கு வெளியே இருந்த கலாமேரி மற்றும் உறவினர்கள் கதறி ஓடினர். குழியில் விழுந்த சுஜித் செய்வதறியாது கதறி கூச்சலிட்டவாறு இருந்தான். உடனடியாக மணப்பாறை தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். மேலும் மணப்பாறை தாசில்தார் தமிழ்க்கனி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்தனர். மீட்பு பணிகளை தீயணைப்பு துறையினர் முடுக்கிவிட்டனர். 3 பொக்லைன் வரவழைக்கப்பட்டு ஆழ்குழாய் அருகே பள்ளம் தோண்டும் பணி நடந்தது. இதற்கிடையில் சுஜித்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் வகையில் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. அவன் எத்தனை அடியில் சிக்கி உள்ளான் என்பதை அறிந்தபோது 22அடியில் தொங்கி கொண்டிருந்தது தெரியவந்தது. அதற்கேற்றார்போல் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.

கிணறு அருகே  பள்ளம் தோண்டுவதால் அதிர்வு தாங்காமல் சிறுவன் சிறிதுசிறிதாக கீழே  இறங்கி கொண்டுள்ளான். இரவு 7.45 மணியளவில் 30 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டான். சிறுவனை மீட்க அரக்கோணத்தில் இருந்து தேசிய  பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.  சம்பவ  இடத்திற்கு திருச்சி கலெக்டர் சிவராசு, எஸ்.பி. ஜியாவுல்ஹக் விரைந்து சென்று மீட்பு  பணிகளை துரிதப்படுத்தினர். போதிய வெளிச்சத்திற்காக லைட்  அமைக்கப்பட்டது. மேலும் குழந்தையிடம் பெற்றோர் பேச்சு கொடுத்து அழுது கொண்டிருந்தனர்.

நவீன கேமராவில் கண்காணிப்பு
குழந்தையின் அசைவுகளை அறிந்து கொள்ளும் வகையில் தீயணைப்பு துறையினர் நவீன கேமராவை உள்ளே செலுத்தி உள்ளனர். அதன்மூலம் வெளியில் இருந்து குழந்தையின் அங்கஅசைவுகளை தெரிந்து ெகாண்டு அதற்கேற்றார்போல் பணிகளை விரைவுப்படுத்தி வருகின்றனர்.

Tags : Firefighters ,Manapparai ,fire , Child, Minister Vijayabaskar, Sujith
× RELATED காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ...