×

பைனலில் கே.எல்.ராகுல் - மயாங்க் அகர்வால் அதிரடி விஜய் ஹசாரே டிராபியில் கர்நாடகா சாம்பியன்: தமிழகத்துக்கு 2வது இடம்

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில் தமிழக அணியை 60 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய கர்நாடகா அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த  இப்போட்டியில், டாசில் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்துவீசியது. தமிழக அணி தொடக்க வீரர்களாக அபினவ் முகுந்த், முரளி விஜய் களமிறங்கினர். அபிமன்யு மிதுன் வீசிய முதல் ஓவரிலேயே முரளி விஜய் டக் அவுட்டாகி வெளியேற,  தமிழக அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. 3வது வீரராக ஆர்.அஷ்வின் களமிறக்கப்பட்டார். இந்த வியூகம் தமிழக அணிக்கு மேலும் பின்னடைவை கொடுத்தது. ஆர்.அஷ்வின் 8 ரன் மட்டுமே எடுத்து கவுஷிக் பந்துவீச்சில் ராகுல் வசம்  பிடிபட்டார். தமிழக அணி 8 ஓவரில் 24 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில் முகுந்த் - அபராஜித் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 124 ரன் சேர்த்தது.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகுந்த் 85 ரன் எடுத்து (110 பந்து, 9 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அபராஜித் 66 ரன் எடுத்து (84 பந்து, 7 பவுண்டரி) துரதிர்ஷ்டவசமாக ரன்  அவுட்டானார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 11 ரன், விஜய் ஷங்கர் 38 ரன் எடுத்து வெளியேற, வாஷிங்டன் சுந்தர் 2 ரன், முகமது 10 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த ஷாருக் கான் 27 ரன் எடுத்தார். முருகன்  அஷ்வின் டக் அவுட்டாக, தமிழக அணி 49.5 ஓவரில் 252 ரன் குவித்து ஆல் அவுட்டானது. நடராஜன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். கர்நாடகா பந்துவீச்சில் அபிமன்யு மிதுன் 9.5 ஓவரில் 34 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்  கைப்பற்றினார். நேற்று அவரது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. கவுஷிக் 2, ஜெயின், கவுதம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 253 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா களமிறங்கியது. கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல் இருவரும் துரத்தலை தொடங்கினர். தேவ்தத் 11 ரன் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கிளீன்  போல்டானார். ராகுல் - மயாங்க் அகர்வால் ஜோடி 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி ரன் குவித்தது. கர்நாடகா 23 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்திருந்த நிலையில் கனமழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.  கே.எல்.ராகுல் 52 ரன் (72 பந்து, 5 பவுண்டரி), மயாங்க் அகர்வால் 69 ரன்னுடன் (55 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடர்ந்து மழை கொட்டியதால், விஜேடி விதிப்படி கர்நாடகா 60 ரன் வித்தியாசத்தில் வென்றதாக  அறிவிக்கப்பட்டது (23 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 87 ரன் எடுத்திருந்தால் போதுமானது). லீக் சுற்றில் தொடர்ச்சியாக 9 வெற்றிகள் பெற்று அசத்தியிருந்த தமிழக அணி, பைனலில் கர்நாடகாவிடம் தோல்வியைத் தழுவி 2வது இடத்துடன்  திருப்தியடைந்தது. கர்நாடகா சாம்பியன் பட்டத்துடன் விஜய் ஹசாரே கோப்பையை முத்தமிட்டது.

அபிமன்யு ஹாட்ரிக்!
தமிழக அணியின் இன்னிங்சில் கடைசி ஓவரை வீசிய கர்நாடக வேகம் அபிமன்யு மிதுன் 3வது பந்தில் ஷாருக் கான், 4வது பந்தில் முகமது , 5வது பந்தில் எம்.அஷ்வின் ஆகியோரது விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை  படைத்தார். தனது 30வது பிறந்தநாளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த அபிமன்யுவுக்கு சக வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். விஜய் ஹசாரே டிராபியில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய முதல் கர்நாடக வீரர் என்ற பெருமையும்  அவருக்கு கிடைத்துள்ளது.

Tags : KL Rahul - Mayang Agarwal ,Vijay Hazare Trophy ,KL Rahul ,Mayang Agarwal , KL Rahul, Mayang Agarwal, Vijay Hazare Trophy, Karnataka Champion, Tamil Nadu
× RELATED டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி