×

இந்தியாவிடம் விளக்கம் கேட்கிறது அமெரிக்கா காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தல்

வாஷிங்டன்: ‘காஷ்மீரில் அரசியல், பொருளாதார ரீதியாக இயல்புநிலை திரும்புவதற்காக வகுத்துள்ள திட்டம் பற்றி தெரிவிக்க வேண்டும். அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்,’ என இந்தியாவிடம் அமெரிக்கா  வலியுறுத்தியுள்ளது.  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்ததில் இருந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காஷ்மீர் மாநிலம் 2 யூனியன்  பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தை தூண்டும் பிரிவினைவாதிகள் எல்லாம் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.  
காஷ்மீரில் மீண்டும் இயல்பு நிலை தொடங்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. போன் சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் பிரிவினைவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீரில் இன்னும் கடைகள்  திறக்கப்படாமல் உள்ளன.

இதனால், 82 நாட்கள் கடந்த நிலையிலும் அங்கு முழுமையான இயல்புநிலை திரும்பவில்லை.  இந்நிலையில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஆலிஸ் ஜி  வெல்ஸ், வாஷிங்டனில் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் 80 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல்  கைது செய்யப்பட்டுள்ளனர். தகவல் தொடர்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இவை, அமெரிக்காவுக்கு மிகவும் கவலை அளிக்கிறது. தகவல் தொடர்பு சேவையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், எஸ்எம்எஸ் மற்றும் இன்டர்நெட் சேவைகள்  காஷ்மீர் மக்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை இந்தியா உடனடியாக விடுவிக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

காஷ்மீரில் அரசியல், பொருளாதார ரீதியான இயல்புநிலை திரும்புவதற்காக திட்டத்தை இந்தியா தெரிவிக்க வேண்டும். காஷ்மீரில் வன்முறை ஏற்பட லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது மற்றும் ஹிஸ்ல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத  அமைப்புகள்தான் முக்கிய காரணம். இவர்கள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர்  கூறினார். இந்நிலையில், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீர் விவகாரம் குறித்து இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். இந்தியா, பாகிஸ்தான்  கேட்டுக் கொண்டால், இரு நாடுகள் இடையே சமரசம் செய்வதில் முக்கியப் பங்காற்ற அவர்  தயாராக உள்ளார்,’’ என்றார்.

‘பாரபட்ச விசாரணை’
தெற்கு ஆசியாவின் மனித உரிமைகள் பற்றி அமெரிக்க நாடாளுமன்ற குழு கடந்த 22ம் தேதி விசாரணை நடத்தியது. இதில், காஷ்மீர் நிலவரம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விசாரணைக் குழுவின் தலைவர்  பிராட் ஷெர்மனுக்கு வெளிநாட்டு வாழ் காஷ்மீர் இந்துக்கள் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தெற்கு ஆசியாவின் மனித உரிமைகள் குறித்து கடந்த 22ம் தேதி நடந்த விசாரணையில், காஷ்மீரின் சொந்த மக்களான காஷ்மீர்  பண்டிட்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. காஷ்மீர் பண்டிட்கள் மீது கடந்த 30 ஆண்டுகளாக மனித உரிமை மீறல் குற்றங்கள் நடந்துள்ளன.

இதனால், 4 லட்சம் காஷ்மீர் பண்டிட்கள் வெளியேறினர். அவர்களின் சாட்சியம் இல்லாமல் நடைபெற்ற உங்கள் குழுவின் விசாரணை, இந்துகளுக்கு எதிரான உணர்வைதான் ஏற்படுத்தும். முஸ்லிம்களைத்தான் மகிழ்ச்சியடைச் செய்யும்.  காஷ்மீரில் இந்துக்களுக்கு எதிராக கடந்த 1990ம் ஆண்டு நடந்த வன்முறையில், ஆர்த்தி டிக்கு சிங் என்ற பத்தரிக்கையாளர் கடுமையாக பாதிக்கப்பட்டார். 2 வாரங்களுக்கு முன்பு கூட அவர் காஷ்மீரில்தான் இருந்தார். காஷ்மீர் நிலவரம் குறித்து  அவரை விட வேறு யாரால் சிறப்பாக பேச முடியும். காஷ்மீர் பண்டிட்களிடம் கருத்து கேட்காமல் நடத்தப்பட்ட இந்த விசாரணை பாரபட்சமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : India ,Kashmir ,release ,prisoners , India, US, Kashmir, Prisoners
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!