×

தலைமை ஆசிரியர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை: 1 கிலோ வெள்ளி, பணம் அபேஸ்

சென்னை: படப்பை அருகே ஆதனூர் சாலையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து 70 சவரன் நகை, 5 ஆயிரம், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.  இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார், மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே ஆதனூர் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரபாகரன் (65). ஓய்வுபெற்ற அரசு  பள்ளி தலைமை ஆசிரியர். இவருக்கு மனைவி, மகன், மகள் ஆகியோர் உள்ளனர். இவரது மகளுக்கு திருமணமாகி, சென்னை தி.நகரில் கணவர் வீட்டில் வசிக்கிறார்.

திருமணமாகி நீண்ட காலத்துக்கு பிறகு, தற்போது பிரபாகரனின் மகள் கர்ப்பமாகி உள்ளார். இதனால் பிரபாகரன் குடும்பத்தினர், கடந்த 3 மாதங்களாக ஆதனூரில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு, தி.நகரில் உள்ள மகள் வீட்டில் தங்கி கவனித்து  வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை, ஆதனூர் சாலையில் உள்ள பிரபாகரனின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர், அங்கு சென்று  வீட்டை சோதனை செய்தார். அப்போது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 70 சவரன் நகைகள், ₹5 ஆயிரம், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

தகவலறிந்து எஸ்பி கண்ணன், பெரும்புதூர் ஏஎஸ்பி ராஜேஷ் கண்ணா, மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது  தூரம் ஓடி நின்றுவிட்டது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வந்து, வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து, மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அக்குடியிருப்பின் சிசிடிவி கேமராவில்  பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : jewelry robbery ,house ,headmaster , Headmaster, jewelry robbery, silver, money
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை