×

கோயம்பேடு பஸ் நிலையத்தில் 40 நவீன கேமராக்கள் பொருத்தம்

அண்ணாநகர்: கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி, 40 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.  சமீபகாலமாக பஸ் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன், பணம் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதேபோல், கஞ்சா விற்பனையும் நடைபெற்று வருகிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, போலீசார் ரோந்து  பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, கூடுதல் கமிஷனர் தினகரன் தலைமையில் 24 மணி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு  கேமராக்கள் செயல்படுகிறதா என்றும் கூடுதல் கேமராக்கள் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

இதில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் 81 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுதவிர கூடுதலாக கேமராக்கள் பொருத்த முடிவு செய்தனர். அதன்படி, கோயம்பேடு பஸ் நிலையத்தில் நவீன கேமராக்களை பொருத்த ₹1.38  கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கோயம்பேடு பஸ் நிலையத்தில் முதற்கட்டமாக 40 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் மீதமுள்ள 41 கேமராக்கள் விரைவில் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

55 லட்சத்தில் இரும்பு தடுப்பு
கோயம்பேடு காய்கறி, பழங்கள் மார்க்கெட்டுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இங்குள்ள கடைகளில் இருந்து வெளியில் வீசப்படும் காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட, ஏராளமான மாடுகள் கூட்டம் கூட்டமாக  வருவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுபற்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வியாபாரிகள் புகார் செய்தனர்.  அதன்பேரில், 1ம் கேட் முதல் 14ம் கேட் வரை மார்க்கெட்டில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து 1ம் கேட் முதல் 14ம் கேட் வரை, மாடுகள் மார்க்கெட் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில், ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டு, இரும்பு  கம்பிகள் கொண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி ஒரு மாதத்தில் முடிந்துவிடும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : bus station ,Coimbatore ,Coimbatore Bus Stand , Coimbatore bus station, cameras
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...