×

மெட்ரோ ரயில் பணியால் பழுதடைந்த திருவொற்றியூர் நெடுஞ்சாலையை சீரமைக்க கையெழுத்து இயக்கம்: கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தினர்

திருவொற்றியூர்: மெட்ரோ ரயில் பணியால் பழுதடைந்த  திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. எனவே இச்சாலையை  சீரமைக்க வலியுறுத்தி  கம்யூனிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
 வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ  நகர்  வரை மெட்ரோ ரயில் விரிவாக்க பணி, பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது.  இதனால் சாலை நடுவில் ராட்சத தூண்கள் கட்டப்பட்டு, அதன் மேல் தண்டவாளம்   அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணி நடைபெற்று வரும் டோல்கேட் முதல் விம்கோ நகர்  வரை சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், வாகனங்கள் செல்லும்போது, இந்த  பள்ளத்தில் சிக்கி நடுரோட்டில் பழுதாகி நின்று விடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், தொழிலாளர்கள் என பலரும் சிரமப்படுவதோடு, ஆம்புலன்ஸ் கூட விரைந்து செல்ல முடியாமல் சிக்கி தவிக்கிறது. எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று மெட்ரோ  நிர்வாகத்திற்கு பலமுறை பொதுமக்கள் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சியினர்  சார்பில் நேற்று கையெழுத்து  இயக்க போராட்டம்  திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் மற்றும் சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தம் ஆகிய  இரண்டு இடங்களில் நடைபெற்றது.  கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மாணவ, மாணவர்கள் அலுவலர்கள்  பலர் இதில் பங்கேற்று கையெழுத்திட்டனர்.

 இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,  சென்னையில் பல இடங்களில் நடைபெற்ற மெட்ரோ ரயில் பணியின் போது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலைகள் முறையாக பராமரிக்கப்பட்டது. ஆனால் திருவொற்றியூரில் அவ்வாறு  சாலைகள் பராமரிக்கப்படுவதில்லை. காரணம் இந்த சாலை  வழியாக அமைச்சர்களும், எம்.பிகளும், ஐஏஎஸ் அதிகாரிகளும் வருவதில்லை. சாதாரண மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலை  என்பதால் மெட்ரோ ரயில் நிர்வாகம் அலட்சியமாக  உள்ளது. இந்த சாலையை சீரமைக்க மெட்ரோ ரயில்  திட்டத்தில் நிதி ஒதுக்கீடு  செய்யப்படும். அதை பயன்படுத்தாமல் அதிகாரிகள் முறைகேடு செய்கிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் பலர் சாலை பள்ளங்களில் தடுமாறி விழுந்து பலத்த  காயமடைந்ததோடு செல்கின்றனர். சிலர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். எனவே உடனடியாக மெட்ரோ ரயில் நிர்வாகம்  இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : highway ,Communist Party ,Thiruvottiyur ,railway ,Metro , Metro Rail Service, Thiruvottiyur, Highway, Communists
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்