பாதாள சாக்கடை பணி முடிந்தும் சீரமைக்கப்படாத ஆதம்பாக்கம் சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் பாதாள சக்கடை அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் பணி முடிந்தும் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். ஆதம்பாக்கம் கருணீகர் தெரு முக்கிய போக்குவரத்து தடமாக  உள்ளது. இச்சாலையில் ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.இந்நிலையில், இந்த சாலையில் பாதாள சாக்கடை  பணிக்காக குடிநீர் வாரியம் சார்பில், கடந்த மாதம் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.  இந்த பணி நடந்து முடிந்த பிறகு மண்ணை கொட்டி பள்ளம் மூடப்பட்டது. ஆனால், முறையாக பள்ளத்தை மூடி, சாலை  அமைக்கப்படாததால், மழை பெய்யும் போதெல்லாம்  இந்த சாலை பள்ளத்தில் தண்ணீர் தேங்கி  சகதியாகி விடுகிறது.

இதனால் இங்குள்ள கடைகளுக்கு  பைக்குகளில் மற்றும் நடந்து  வருபவர்கள் சறுக்கி விழும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.  மேலும், இங்குள்ள கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படுவதாக  வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி வியாபாரிகள் கூறுகையில், “பொருளாதார மந்த நிலையால் நாங்கள் ஏற்கனவே வியாபாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலாவது  ஓரளவுக்கு வியாபாரம் நடக்கும் என  எதிர்பார்த்தோம். ஆனால், இந்த சாலை சகதியாக உள்ளதால், பொதுமக்கள் இங்குள்ள கடைகளுக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். இதனால், பண்டிகை சீசனில் கூட கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருவது குறைந்து விடுகிறது. இதனால்  போட்ட  முதலீட்டை எடுக்க முடியாமல் போகிறது. ஆகவே சம்மந்தப்பட்ட  மாநகராட்சி அதிகாரிகள் இதில் தலையிட்டு இந்த சாலை பள்ளத்தை முறையாக மூடி, சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.Tags : Adampakkam Road ,motorists , Underground sewer work, Adambakkam road, motorists are heavy
× RELATED வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு