×

ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கு மறுவாக்கு எண்ணிக்கை முடிவை நவ.13 வரை வெளியிட தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நவம்பர் 13ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் எம்.அப்பாவு, அ.தி.மு.க சார்பில் ஐ.எஸ். இன்பதுரை போட்டியிட்டனர். இதில், இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கடைசி 3 சுற்று வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை தாக்கல் செய்ய தெரிவித்ததோடு அவற்றை தற்போது எண்ணியும் முடித்துள்ளது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக இன்பதுரை தரப்பில் கடந்த 3ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் உத்தரவில்; ராதாபுரம் தொகுதி தேர்தல் விவகாரத்தில் மறுவாக்கு எண்ணிக்கை என்ற சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய முடியாது.

ஆனால் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்கப்பட்டாலும் அதன் முடிவை மட்டும் வெளியிட தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பட்டியலிட்டும் அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் அமர்வு இருந்து வந்ததால் ராதாபுரம் தொகுதி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில்,”ராதாபுரம் தொடர்பான வழக்கு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் அதன் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில்,” ராதாபுரம் தொகுதி தொடர்பான வழக்கை தீபாவளி விடுமுறைக்கு பின்னர் அடுத்த மாதம் அதாவது நவம்பர் 13ம் தேதி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். அதுவரை வழக்கில் தற்போது உள்ள நிலை தொடரும் என உத்தரவிட்டார். இதையடுத்து மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இருக்கும் தடை அடுத்த விசாரணை வரை தொடரும்.

Tags : Radhapuram , Radhapuram constituency case , banned till Nov 13...
× RELATED தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர்...