×

நீட் ஆள்மாறாட்ட விவகாரம் 4 பேர் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

மதுரை: நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் கைதான 4 பேரின் ஜாமீன்மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
 மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டார். இதையடுத்து உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், ஆள் மாறாட்டம் செய்ததாக சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பிரவீன் (21), ராகுல் (20), இவர்களது தந்தையர் சரவணன் (44), டேவிட் (47), மாணவி பிரியங்கா அவரது தாய் மைனாவதி மற்றும் தர்மபுரியை சேர்ந்த மாணவர் இர்பான், அவரது தந்தை முகமது சபி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் பிரவீன், இவரது தந்தை சரவணன், ராகுல், இவரது தந்தை டேவிட் ஆகியோர், தங்களுக்கு ஜாமீன்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இதே வழக்கில் விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ள சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த மாணவர் ரிஷிகாந்த் (19), ரவிக்குமார் (61) ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அரசு வக்கீல் ராபின்சன் ஆஜராகி, ‘‘ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளவர்கள் பெயரில் ஒரே நேரத்தில் 2 இடங்களில் தேர்வு எழுதப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வாதிடுவதற்காக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக உள்ளார். அதற்காக எங்களுக்கு காலஅவகாசம் ேவண்டும்’’ என்றார். இதையடுத்து மனுக்கள் மீதான விசாரணையை அக்.30க்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மாணவி உள்பட 8 பேருக்கு காவல் நீடிப்பு

மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா, இவரது தந்தை டாக்டர் வெங்கடேசன், மாணவர்கள் பிரவீன், ராகுல், இவர்களது தந்தையர் சரவணன், டேவிட், மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோர் கைதாகி சிறையில் உள்ளனர். இந்த 8 பேரின் நீதிமன்றக்காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து 8 பேரையும் சிபிசிஐடி போலீசார், தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நவ. 8ம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

Tags : impersonation hearing ,impersonation ,hearing , Neet impersonation, hearing postponed
× RELATED தூத்துக்குடியில் நாளை திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம்