×

பாலியல் பலாத்காரத்தால் கருவுற்ற 15 வயது சிறுமியின் கருவை கலைக்க வேண்டும் : சேலம் மருத்துவமனைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கர்ப்பமான 15 வயது  சிறுமியின் கருவை கலைத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சேலம் மருத்துவ கல்லூரி முதல்வருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தங்களுடைய சொந்த ஊருக்கு சென்றிருந்த போது, வீட்டின் அருகில் வசித்து வரும் வெங்கடேஷ், தமிழரசன் ஆகிய இருவரும் சேர்ந்து தன்னுடைய 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் தன் மகள் கருவுற்றுள்ளாள். இது தொடர்பாக  சேலம் சங்ககிரி பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தனது மகள் கருவைக் கலைக்கவும், மகளுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கே.செல்வராஜ் ஆஜராகி, கருவுற்ற சிறுமியின் குடும்பம் மிக ஏழ்மையான குடும்பம். ஆகையால் அவர்களால் மருத்துவ செலவுகளை செய்ய இயலாது என்பதால் அரசு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து கருவை கலைக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மருத்துவர்கள் குழுவை அமைத்து, சிறுமியை மருத்துவ பரிசோதனைகள் செய்து கருவை கலைக்க வேண்டும் என்று சேலம் அரசு மருத்துவ கல்லூரி டீனுக்கு உத்தரவிட்டதோடு, மருத்துவ சிகிச்சை தொடர்பான  அறிக்கையை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக தமிழக உள்துறை முதன்மை செயலாளர், சேலம் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதிலளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : rape , 15-year-old girl ,aborted , rape
× RELATED இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் சிறுமி கூட்டு பலாத்காரம்