×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதை தொடர்ந்து, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர், தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 30 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

இருப்பினும் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் தடை நீடிக்கிறது.  இதேபோல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 35 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இது மாலையில் விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனை தொடர்ந்து, டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 30 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அப்போது, அணையின் நீர்மட்டம் 120.20 அடியாகவும், நீர் இருப்பு 93.79 டிஎம்சியாகவும் இருந்தது.

Tags : Mettur Dam Water , Water fall, Mettur Dam
× RELATED ஏற்காடு மான் பூங்கா, முட்டல் நீர் வீழ்ச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்