அனைத்து மருத்துவ கல்லூரி மாணவர்களின் கைரேகை, விவரங்களை சிபிசிஐடியிடம் தரவேண்டும் : தேசிய தேர்வு முகமைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்கள், கைரேகைகளை சிபிசிஐடியிடம் வழங்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை வாங்கிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பயிற்சி மையங்கள், புரோக்கர்கள் பலர் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மோசடி மூலம் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த சில மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆள்மாறாட்டம் தொடர்பாக அரசு மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவுகளை சிபிசிஐடியிடம் வழங்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் கல்லூரியில் இந்தாண்டு மருத்துவம் பயின்று வரும் மாணவர்களின் விவரங்களை தேசிய தேர்வு முகமைக்கு வழங்க தயாராக இருப்பதாக சவீதா நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், இந்தாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்கள் மற்றும் கைரேகைகளை வரும் அக்டோபர் 30ம் தேதிக்குள் தேசிய தேர்வு முகமைக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும். அவற்றை நவம்பர் 4ம் தேதிக்குள் சிபிசிஐடியிடம் தேசிய தேர்வு முகமை வழங்க வேண்டும். மேலும், வருமான வரித்துறை நடத்திய சோதனையில் நாமக்கல் மற்றும் பெங்களூருவில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையங்களில் அதிகளவில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, வருமான வரித்துறையின் இயக்குனரை தாமாக முன்வந்து இந்த வழக்கில் இணைக்கிறோம். வழக்கில் வருமான வரித்துறை பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories:

>