×

தீபாவளி பண்டிகையை வரவேற்கும் வகையில் மெட்ரோ ரயில்களில் வண்ண ஓவியங்கள்

சென்னை: தீபாவளி பண்டிகையை வரவேற்கும் வகையில் மெட்ரோ ரயில்களில் பயணிகளை கவரும்படி வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை வெகுவிமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாகவே ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதற்காக சிறப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

மேலும், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை வரவேற்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, நேர நீட்டிப்பு, கட்டண குறைப்பு உள்ளிட்ட கவர்ச்சிகரமான சேவைகளை வழங்குகிறது.
அதன்படி, இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை வரவேற்கும் வகையில் நாளை மற்றும் நாளை மறுதினம் 50 சதவீத கட்டண சலுகையை மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கியுள்ளது. இதேபோல், அனைத்து மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் வண்ணமயமான கோலங்கள், தீபாவளி வரைபடங்கள் ஒட்டப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவாயில்களில் ஒளிவிளக்குடன் கூடிய தீபாவளி வண்ண ஓவியங்களை ஒட்டி பயணிகளை கவரும் வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கு ‘வண்ணமயமான தீபாவளி’ என்ற பெயரை நிர்வாகம் சூட்டியுள்ளது. விமானநிலையம்-வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல்-பரங்கிமலை வரையிலான வழித்தடத்தில் இந்த ஏற்பாடுகளை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மேலும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 15 மெட்ரோ ரயில்களை இவ்வழித்தடத்தில் நேற்று முதல் இயக்கி வருகிறது.


Tags : Metro ,Diwali. Diwali Welcome ,Metro Trains , Color paintings , Metro trains, welcome Diwali
× RELATED சென்னையில் நாளை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு