×

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 29ம்தேதி பதவியேற்பு

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 29 வரும் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் பதவியேற்கிறார்கள். தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 21ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 1,13,766 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி 68,842 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்தார்.
அதேபோன்று, நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 95,377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 61,932 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்தார். இரண்டு அதிமுக வேட்பாளர்களுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் நேற்று முன்தினம் வழங்கினர். இதன்மூலம் தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 125ஆக உயர்ந்துள்ளது. திமுகவின் பலம் 100ஆகவும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் 7ஆகவும் உள்ளது.

இதையடுத்து வெற்றிபெற்ற இரண்டு அதிமுக எம்எல்ஏக்களும் வருகிற 29ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொள்கிறார்கள். இவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் முத்தமிழ்செல்வன் மற்றும் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் நேற்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags : AIADMK MLAs ,constituency ,Vikravandi ,Nankuneri ,win ,Nanguneri , AIADMK MLAs win ,Vikravandi, Nanguneri constituency
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...