×

சிட்லப்பாக்கம் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் கணக்கில் வராத 15 லட்சம் சிக்கியது

சென்னை: சிட்லப்பாக்கத்தில் உள்ள புனித தோமையார்மலை ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச  ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.15 லட்சம் சிக்கியதாக  தகவல் வெளியாகியுள்ளது. தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் முதல் பிரதான சாலையில் புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் கவுல்பஜார், திரிசூலம், திருவஞ்சேரி, ஒட்டியம்பாக்கம், கோவிலம்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், முடிச்சூர், வேங்கைவாசல், மதுரைப்பாக்கம், மூவரசன்பட்டு, அகரம்தென், சித்தாலப்பாக்கம், நன்மங்கலம், பொழிச்சலூர் என 15 ஊராட்சிகள் செயல்படுகின்றன. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள கட்டிட அனுமதி சார்பான பணிகள், ஒன்றிய சாலை பணிகள், ஊரக வளர்ச்சி துறை சார்பான பணிகள், அங்கன்வாடி மையங்கள், தமிழக அரசு சமுதாய நலத்துறை நல உதவிகள், திருமண உதவி திட்டம், பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நிதி உதவி திட்டம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனங்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் இருந்து சிறப்பு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி குமரகுருபரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு நேற்று மதியம் ஒன்றிய அலுவலகத்தில் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அலுவலகத்திற்கு வந்திருந்த 10க்கும் மேற்பட்ட ஊராட்சி அலுவலர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அலுவலகத்தில் மூன்று அதிகாரிகளின் அறைகளில் கணக்கில் வராத ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரி சார்பில் கூறப்பட்டது. மேலும் அந்த பணம் குறித்தும், கணக்குகள் குறித்தும் விசாரித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதிமுக மாவட்ட செயலாளரின் பினாமி ஓட்டம்


சிட்லப்பாக்கத்தில் உள்ள புனித தோமையார்மலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் காஞ்சி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் பினாமி மகேஷ் என்பவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அலுவலகத்தில் நடைபெறும் எந்த பணிகளாக இருந்தாலும் இவர்கள் சொன்னால் மட்டுமே நடைபெறும் என்ற நிலை நீண்ட நாட்களாகவே நிலவுகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக 15 ஊராட்சிகளில் இருந்து வசூல் செய்யப்பட்ட பணத்தை சிட்லப்பாக்கம் ராஜேந்திரனிடம் ஒப்படைப்பதற்காக ஊராட்சி அதிகாரிகள் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்திருந்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியிருக்கலாம் என ரகசிய தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒன்றிய அலுவலகத்தில் சோதனைக்காக வந்தபோது அவர்களை கண்ட மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. எனவே அங்கு பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் பணம் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளருக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Tags : police raid ,police raids ,office raids ,Siddhlappakkam Union , Siddhlappakkam Union office raids, bribery police raid, 15 lakh unaccounted
× RELATED சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் சோதனை