×

நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் உயர்வு : அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு

சென்னை: நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ் வளர்ச்சி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் கலை பண்பாட்டு துறையின் கீழ் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட கலைஞர்கள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகிறார்கள். தமிழகத்தில் 33,575 நாட்டுப்புற கலைஞர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளார்கள். இவர்களுக்கு 1,39,41,132 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்றுள்ள உறுப்பினர்களுக்கு கூடுதலாக்கப்பட்ட நிதியுதவிகளுடன் வழங்கப்படுவதற்கான அரசாணை  17.09.2019 அன்று வெளியிடப்பட்டது.

அதன்படி, நாட்டுப்புற கலைஞர்களின் வாரிசுகளில் பெண்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக (இரு வாரிசுகளுக்கு) 10, 11ம் வகுப்பு பயிலும் மகளுக்கு 1,000, 12ம் வகுப்பு பயிலும் மகளுக்கு 1,500 வழங்கப்படும். பட்டப்படிப்பு பயில்பவர்களுக்கு 1,500 ஆண்டொன்றுக்கு வழங்கப்படும்.    
விடுதியில் தங்கி பட்டப்படிப்பு பயில்பவர்களுக்கு 1,750, முதுகலை பட்டப்பபடிப்பு பயில்பவர்களுக்கு 4,000, விடுதியில் தங்கி முதுகலை பட்டப்படிப்பு பயில்பவர்களுக்கு 5,000, தொழில்நுட்ப பட்டப்படிப்பு பயில்பவர்களுக்கு 4,000, விடுதியில் தங்கி தொழில்நுட்ப படிப்புகள் பயில்பவர்களுக்கும், முதுகலை தொழிற் படிப்புகள் பயில்பவர்களுக்கும் 6,000, விடுதியில் தங்கி முதுகலை தொழிற்படிப்புகள் பயில்பவர்களுக்கு ₹8,000, தொழில்நுட்ப பயிலக படிப்பு (பாலிடெக்னிக்), தொழிற்பயிலகப் படிப்பு (ஐ.டி.ஐ) பயில்பவர்களுக்கு 1,000 விடுதியில் தங்கி தொழில்நுட்ப பயிலகம் மற்றும் தொழிற்பயிலகம் பயில்பவர்களுக்கு 1,200 ஆண்டொன்றுக்கு வழங்கப்படும்.

திருமண நிதியுதவியாக 5,000, மகப்பேறு நிதியுதவி 6,000, கருச்சிதைவு நிதியுதவி 3,000, நாட்டுப்புற கலைஞர்களுக்கு மூக்குக்கண்ணாடி வாங்க 1,500, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 20,000, ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை 5,000, விபத்து மரண உதவித்தொகை 1,00,000/- என நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Pandiyarajan ,folk artists ,Folk Artists for Increasing Welfare Assistance , Increasing welfare assistance, folk artists
× RELATED தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசினார் கவுண்டமணி