×

மகாராஷ்டிராவில் பா.ஜ கூட்டணியில் விரிசல் ஆட்சி அமைப்பதில் குழப்பம்

* முதல்வர் பதவி கேட்டு சிவசேனா பிடிவாதம்
* அமித்ஷா அவசர ஆலோசனை

மும்பை:  மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க தங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி கொடுக்கவேண்டும் என்று சிவசேனா பிடிவாதமாக இருந்து வருகிறது. இதனால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜ 105 தொகுதியிலும், சிவசேனா 56 தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதியிலும், காங்கிரஸ் 44  தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. சிவசேனா ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்கு சம பங்கு கொடுக்கவேண்டும் என்று கூறி வருகிறது. அமித்ஷாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அமல்படுத்தும் நேரம் இது என்றும் உத்தவ்தாக்கரே தெரிவித்திருந்தார். இதனால் புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவசேனா காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து ஆட்சியமைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து பதிலளித்த மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாஹேப் தோரத்,‘‘பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க சிவசேனாவுடன் கூட்டு சேரும் வாய்ப்பு இல்லை. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படவே மக்கள் வாக்களித்துள்ளனர்.  சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களை சிவசேனா இதற்காக அணுகினால் இது குறித்து எங்களது கட்சி தலைமையிடம் ஆலோசனை கேட்டு அதற்கு தக்கபடி முடிவு செய்வோம்’’ என்றார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். நாங்கள் சிவசேனாவுடன் செல்லமாட்டோம் என்றும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து எதிர்கால திட்டம் குறித்து முடிவு செய்வோம். மக்கள் எங்களிடம் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். ஆட்சியமைக்க வேண்டும் என்ற எண்ணமே ஏற்பட்டதில்லை என்றும் சரத்பவார் தெரிவித்தார்.  

இதற்கிடையே இன்று சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இது குறித்து விவாதிக்க நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் புதிய அரசு அமைவது குறித்து ஆலோசிக்கப்படும். அதோடு இதில் புதிய சிவசேனா சட்டமன்ற தலைவரும் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேலும் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டுமானால் தங்களுக்கு ஏற்கனவே சொன்னபடி இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி கொடுக்கவேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக இருக்கிறது. இதனால் உடனே ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிரா பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் பாஜகவை விமர்சனம் செய்யும் வகையில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புலி கடிகாரத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு (தேசியவாத காங்.சின்னம்).  தாமரையை(பாஜக சின்னம்) மோப்பம் பிடிப்பது போன்று வெளியிட்டுள்ளார். முன்னாள் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக்சவான் தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தல் முடிவுகள் சுவாரஸ்யமான சாத்தியக்கூறுகைகளை உருவாக்கி இருக்கிறது என்று தெரிவித்தார். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சிவசேனாவுடன் கூட்டணி வைக்குமா என்று கேட்டதற்கு, பாஜகபோன்று  சிவசேனா பெரிய தீய சக்தி கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

Tags : BJP ,Maharashtra Maharashtra , Confusion , BJP coalition,rule in Maharashtra
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...