×

திடீரென புகுந்து கரிசனம் காட்டினார் : தான் படித்த பள்ளியை தத்தெடுத்த பெண் இன்ஸ்பெக்டர்

சென்னை: இன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் பெரிய அஸ்தஸ்தில் இருப்பவர்கள், விஐபிக்கள், மற்றும் அரசியல்வாதிகளில் சிலர் பொதுகாரியங்களில் ஈடுபடுவதோடு தனது சொந்த பணத்தில் இருந்து உதவிக்கரம் நீட்டுவார்கள். இதுபோல் சென்னையில் ஒரு பெண் இன்ஸ்பெக்டர் திடீரென தான் நடித்த பள்ளியில் புகுந்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதுபற்றிய விவரம்:- சென்னை வண்ணாரப்பேட்டையில் மகாராணி தியேட்டர் அருகே திருவொற்றியூர் மெயின் ரோட்டில் நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. வெளியில் இருந்து பார்த்தால் இதை பள்ளிக்கூடம் என்று சொல்லமுடியாத அளவிற்கு ஏதோ ஒரு கட்டிடம் உள்ளது எனதான் நினைக்கத்தோன்றும். ஆனால் வடசென்னை நடுநிலைப்பள்ளி என அழைக்கப்படும் இந்த பள்ளி நாம் சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே அதாவது 1941ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 82 ஆண்டு பெருமை பெற்றது.

அன்றைய நாளில் ஏராளமான பிள்ளைகள் படித்து வந்தனர். உட்கார கூட இடம் இல்லாமல் தரையில் அமர்ந்து படிப்பார்கள். ஆனால் காலமாற்றத்தால் இன்று தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து இன்று வெறும் 60 குழந்தைகள் மட்டும்தான் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு சில நாட்களுக்கு முன் காக்கி உடை அணிந்த பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் திடீரென்று நுழைந்தார். அப்போது பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர்கள், போலீஸ் உடையில் வந்ததை பார்த்து பதறிபோனார்கள். அவர்களது தயக்கத்தை கண்ட பெண் இன்ஸ்பெக்டர், எந்த கலக்கமும் வேண்டாம் நான் இந்த பள்ளியின் முன்னாள் மாணவிதான் என்ற பிறகுதான் ஆசிரியர்கள் சகஜ நிலைக்கு வந்தனர்.

என் பெயர் காஞ்சனா. நான் சென்னை கிண்டியில் உள்ள காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறேன். 1981ம் ஆண்டு இதே பள்ளியில்தான் 5ம் வகுப்புவரை படித்தேன். தற்போது பள்ளியில் மாணவர்கள் வருகை குறைந்து விட்டதாக அறிந்தேன். அதனால் மனசு கேட்கவில்லை. நாம் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணினேன். நம் பள்ளி மீண்டும் புத்துணர்ச்சி பெறவேண்டும். அதனால் இந்த பள்ளியை நானே தத்தெடுத்து அதற்கான வேண்டிய வசதிகளை ெசய்து கொடுக்கிறேன் என்று கண்கலங்கியவாறு கூறினார். அதோடு காஞ்சானா நிற்கவில்லை.

சொன்ன வாக்குப்படி உடனடியாக ரூ.50 ஆயிரம் செலவில் பள்ளிக்கு பெயின்ட் அடித்து கொடுத்தார். அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளை சந்தித்து கல்வியின் முக்கியத்தும் குறித்தும், அதனால் இன்று சாதித்து பலதுறைகளில் பணியாற்றி வருபவர்கள் குறித்தும் விலாவாரியாக எடுத்துக்கூறினார். மேலும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி தாங்களும் இதுபோன்ற உதவிகளை பிறருக்கு செய்யவேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அங்கிருந்து விடைபெறும்போது ஆசிரியர்கள் அனைவரும், காஞ்சனா கையை குலுக்கி நன்றி பெருக்குடன் அனுப்பி வைத்தனர். அப்போது ஆசிரியர்கள் மட்டுமின்றி அங்கு படிக்கும் மாணவர்களிடம், இனி நம் பள்ளிக்கு விடிவு காலம்தான் என்ற நம்பிக்கை ஒளி அவர்கள் முகத்தில் தெரிந்தது. காக்கி சட்டைக்குள் ஒளிந்திருக்கும் அவரது சேவை மனப்பான்மையை அப்பகுதி மக்களும் மனதார பாராட்டினர்.

Tags : girl inspector ,school ,Inspector ,Chennai , Chennai, School, Inspector,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு