சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பஸ், ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தென்மாநிலங்களை சேர்ந்த பலர், வேலை, படிப்பு, தொழில் நிமித்தமாக சென்னையில் தங்கியுள்ளனர். இவர்கள் தீபாவளி, ெபாங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விஷேச நாட்களை, தங்களது சொந்த ஊர்களில் கொண்டாடுவதையே விரும்புவார்கள். அந்த வகையில் பெரும்பாலும், ரயில் பயணத்தையே தேர்வு செய்வார்கள். ரயில்களில் முன்பதிவு துவங்கிய சில நிமிடத்திலேயே, டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடும். அடுத்ததாக, ஆம்னி மற்றும் அரசு பஸ்களை தேர்வு செய்வார்கள். இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து துறை சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், 5 இடங்களிலிருந்து, இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
அதாவது, செங்குன்றம் வழியாக ஆந்திராவுக்கு செல்லும் பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையத்திலிருந்தும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பஸ்கள் கே.கே. நகர் பஸ் நிலையத்திலிருந்தும் புறப்படும். திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் (எஸ்இடிசி உட்பட) தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்தும், திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் மற்றும் மதுராந்தகம், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிறுத்தத்திலிருந்தும் புறப்படும். வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், சித்தூர் செல்லும் பஸ்கள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்திலிருந்து புறப்படும்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பஸ்கள், மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச்சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. நேற்று (24ம் தேதி) முதல், தற்போது வரை சுமார் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தீபாவளிக்கான சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு மையங்களும் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல், 300 கிமீ தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்பு பஸ்களில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com, www.goibibo.com என்ற இணையதளங்களில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எழும்பூர், தாம்பரம், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை, பொதிகை, பாண்டியன், மலைக்கோட்டை, ராமேசுவரம் உள்பட பெரும்பாலான ரயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் கோவை இன்டர்சிட்டி, சேரன் விரைவு ரயில், நீலகிரி, ஏற்காடு விரைவு ரயில் உள்பட ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முன்பதிவில்லாத பெட்டிகளில் தள்ளுமுள்ளு காணப்பட்டது. மேலும் பயணிகள் ரயில்களில் பட்டாசுகள் எதுவும் கொண்டு செல்லக்கூடாது என்று துண்டுபிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பலத்த சோதனைக்கு பிறகு பயணிகள் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.