×

செஞ்சி, வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.15 கோடிக்கு ஆடுகள் விற்பனை

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் கடலூர் மாவட்டம் வேப்பூரில் தீபாவளியை முன்னிட்டு இன்று நடந்த வாரச்சந்தையில் ரூ.15 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. நாடு முழுவதும் .தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (27ம்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெறும் வெள்ளிக்கிழமை வார சந்தைக்கு இன்று காலையில் வருகை தந்தனர்.

இதையொட்டி அதிகாலை முதல் வேலூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தாங்கள் வளர்த்த வெள்ளாடு, செம்மறி ஆடுகளையும் வாகனத்தில் ஏற்றி செஞ்சி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச்சென்றனர். ஒரு ஆட்டின் விலை சுமார் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.10 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டன.

வேப்பூர்


இதேபோல் கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெறும் வாரச்சந்தையும் பிரசித்தி பெற்றது. இங்கும் தீபாவளி, பக்ரீத், ரம்ஜான் பண்டிகை காலங்களில் ஆடுகள் விற்பனை களைகட்டுவது வழக்கம். தீபாவளியை முன்னிட்டு வேப்பூர் கூட்டுரோட்டில் இன்று நடந்த வெள்ளிக்கிழமை வாரச்சந்தையில் கடலூர், சேலம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
இவற்றை வாங்குவதற்கும் வெளி மாவட்ட வியாபாரிகள் வந்து குவிந்தனர்.

அதிகாலையிலேயே ஆடுகள் விற்பனைக்கு வந்து விட்டதால் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச்சென்றனர். ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்பட்டது. அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். செஞ்சி, வேப்பூர் ஆகிய இடங்களில் இன்று நடந்த வாரச்சந்தையில் தீபாவளியை முன்னிட்டு மொத்தம் ரூ.15 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகி உள்ளது.


Tags : Villupuram ,Diwali , Villupuram, Ginger, Diwali, Weekly Market, Goat Sale
× RELATED விழுப்புரம்-திருப்பதி ரயில் பகுதி ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு