தொற்று நோய்கள் பரவும் காலம் என்பதால் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் காலம் என்பதால் மருத்துவர்களின் சேவை மக்களுக்கு தேவை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். மருத்துவர்கள் தங்கள் கோரிக்கையை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எடுத்துரைக்க வலியுறுத்தியுள்ளார். தீபாவளி நேரம் என்பதால் பட்டாசு விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புறநோயாளிகள் அவதிக்கு ஆளானார்கள். மேலும் டெங்கு பலி அதிகரிக்கும்  அபாயமும் ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் அரசு மருத்துவர் பணியிடங்களை நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும், தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும், பட்டமேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

பட்டமேற்படிப்பு  மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு  அரசு டாக்டர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி, உண்ணாவிரதம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த  டாக்டர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர், உயரதிகாரிகள் குழுவினர்  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதே 6 வாரங்களுக்குள் கோரிக்கைகளை  நிறைவேற்றுவதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உறுதியளித்தார்.

ஆனால் ஒரு மாதத்துக்கு மேல்  ஆகியும் இதுவரை கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. அதனால் டாக்டர்கள் கூட்டமைப்பினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் 15 ஆயிரம் அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. இதனால் புறநோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சில இடங்களில் நர்சுகளே  நோயாளிகளுக்கு காய்ச்சல், தலைவலி, சளி போன்ற நோய்களுக்கு மருந்து கொடுத்தனர். பயிற்சி மருத்துவர்களை வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>