×

சுவாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட நுங்கம்பாக்கம் படத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி

சென்னை:  நுங்கம்பாக்கம் படத்திற்கு தடை விதிக்க கோரி, ராம்குமாரின் தந்தை தொடர்ந்த மனுவை  தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவாதி கொலை சம்பவம்

சென்னையை சேர்ந்த மென்பொறியாளர் ஸ்வாதி, கடந்தாண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடையதாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த பொறியியல் மாணவர் ராம்குமாரை கைது செய்து புழல் சிறையில் போலீசார் அடைத்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட போது அங்கு மின்சார வயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். சுவாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்து நுங்கம்பாக்கம் என்ற பெயரில் ரமேஷ் திரைப்படம் தயாரித்துள்ளார்.

படத்திற்கு தடை கோரி ராம்குமாரின் தந்தை மனு

இந்நிலையில் இந்த படத்திற்கு தடை கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அவர் தாக்கல் செய்த மனுவில், தன் மகன் ராம்குமார் மீது எந்த தவறும் இல்லை.  இது தொடர்பான மனித உரிமை ஆணையம், தாழ்த்தப்பட்டோருக்கான ஆணைய விசாரணைகள் நிலுவையில் உள்ளது. தன் மகனின் மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து சட்டப்போராட்டம் நடத்தி வரும் நிலையில், இச்சம்பவங்களை மையமாக வைத்து இயக்குனர் ரமேஷ் என்பவர் நுங்கம்பாக்கம் என்ற தலைப்பில் திரைப்படத்தை எடுத்துள்ளார். இப்படத்தை வெளியிட்டால் விசாரணை பாதிக்கும், உண்மை நிலை வெளியில் தெரியாத நிலை ஏற்படும் என்பதால் இந்த திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்.என்று கூறியுள்ளார்.

மனு தள்ளுபடி

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா,  ராம்குமாரின் மரணம் தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருவதால் இந்த வழக்கில், நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Nungambakkam ,Swati , Swati, Murder, Ramkumar, Suicide, Nungambakkam, Medieval, Prohibition
× RELATED வாக்கு எண்ணும் மைய பகுதிகள் ‘சிவப்பு’ மண்டலம் காவல் துறை அறிவிப்பு