×

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேருக்கு கண்ணாடிகூண்டு அமைக்கும் பணி மும்முரம்

திருவாரூர் : திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜசுவாமி கோயில் உள்ளது. சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் விளங்குகிறது. மேலும் பூங்கோயில் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. தியாகராஜசுவாமி கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் அருள்பாலித்து வருகின்றனர். கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி நிலபரப்பில் அமையப்பெற்றது என்ற சிறப்பினை கொண்ட இக்கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய 2வது தேராகும்.

அதன்படி சாதாரணமாக 30 அடி அகலமும், 30 அடி உயரமும், 220 டன் எடையும் கொண்ட இக்கோயிலின் ஆழித்தேர் தேரோட்டத்தின்போது மூங்கில் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு மொத்தம் 300 டன் எடையுடன் நகரின் 4 வீதிகளிலும் ஆடியசைந்து வருவது கண்கொள்ளா காட்சியாகும். அதன்படி கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறும்.

இந்நிலையில் இந்த தேரோட்டத்திற்காக ஆழித்தேரின் மேற்கூரையானது பிரிக்கப்பட்டு பின்னர் மூடப்படும் நிலையில் மற்ற காலங்களில் தேரினையும், தேரில் உள்ள அழகிய வேலைப்பாடுகள் கொண்ட மரசிற்பங்களையும் பொதுமக்களும், பக்தர்களும் குறிப்பாக வெளியூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளும் ஆழிதேரை முழுமையாக பார்க்கமுடியாத நிலை இருந்து வருவதால் இந்த தேரினை கண்ணாடி கூண்டு கொண்டு மூட வேண்டும் என்றும் அப்போது தான் ஆழித்தேர் முழுமையாக தெரியும் என்றும் பொது மக்கள் மற்றும் பக்தர்கள் வைத்த வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்படி ஆழித்தேரினை ரூ.40 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணிக்கு அரசு மூலம் நிதி ஒதுக்கப்பட்டு இதற்கான பணி கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்டது. அதன்படி தேரின் 4 பக்கமும் முதலில் பில்லர் அமைக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் தேரின் மேல்பாகம் வரையில் இரும்பு பட்டைகள் கொண்டு கூரை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் நடப்பாண்டில் எம்.பி தேர்தல் மற்றும் கோடை வெப்பம் அதிகரிப்பு போன்ற காரணங்களினால் இந்த ஆழித்தேரோட்டம் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2 மாதம் முன்னதாகவே (கடந்த ஏப்ரல் மாதம் 1 ம்தேதி) நடைபெற்றதன் காரணமாக இந்த கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தேரோட்டம் நடைபெற்று முடிந்து 6 மாதங்களை கடந்துள்ள நிலையில் தற்போது கண்ணாடி கூண்டு அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தேர் சக்கரம் வரையில் சுமார் 10 அடி உயரத்திற்கு நான்கு புறமும் இரும்பு தகடு கொண்டும், அதற்கு மேலே கண்ணாடி கூண்டும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


Tags : Thiruvarur Thyagarajaswamy Temple ,Alizhir. Tiruvarur Thiyagaraja Swami temple Chariot , Tiruvarur ,Thiyagaraja swami temple,Chariot ,Glass cage
× RELATED திருவாரூர் கோயிலில் நாளை ஆழித்தேரோட்டம்: 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு