×

அரிமளம் அருகே கேட் கீப்பர் இல்லாததால் ரயில் இயக்குபவர் கேட்டை மூடி திறக்கும் அவலம்

திருமயம் : அரிமளம் அருகே ரயில்வே கேட் கீப்பர் இல்லாததால் ரயில் இயக்குபவர்களே கேட்டை மூடி திறப்பதால் பயண நேரம் அதிகமாவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை இருந்த மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 7 அண்டுகளுக்கு மேலாக நடைபெற்று, தற்போது முடிவுக்கு வந்து ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கப்படும் ரயில்கள் சீராக இயக்கப்படுவதில்லை என பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காரணம் புதிய ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு ரயில் பாதையை கிராஸ் செய்யும் கிராம சாலை, நெடுஞ்சாலை வரும் வாகனங்களை கட்டுப்படுத்த கட்டப்பட்டுள்ள ரயில்வே கேட்டுகள் கேட் கீப்பர் இல்லாமல் இருப்பதாக பயணிகள், வாகன ஓட்கள்,பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ரயிலை இயக்குபவர்கள் ரயிலை நிறுத்திவிட்டு கேட்டை மூடி, திறந்து விட்டு சாலையில் வரும் வாகனங்களை கையாளுகின்றனர். இதனால் பல இடங்களில் ரயில் நின்று செல்வதால் கால தாமதமாவதோடு திருவாரூரில் இருந்து காரைக்குடி, அறந்தாங்கி பகுதிகளுக்கு செல்லும் ரயில் பயணிகள் ரயிலை தவிர்த்து வருகின்றனர்.

மேலும் இதையே நம்பி இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனிடையே ஒருசில ரயில்வே கேட் உள்ள இடங்களில் வரும் ரயில்கள் சாலையில் வரும் வாகனங்களை பற்றி கவலைப்படாமல் ரயிலை இயக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருவாரூர்-காரைக்குடி ரயில் பாதையில் உள்ள ரயில்வே கேட்டிற்கு கேட் கீப்பர்களை உடனே பணியமர்த்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள், பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : train operator ,Arimalam ,Railway Gates ,No Gate Keeper , arimalam, thiruvarur,Karaikudi, BroadGuage,Railway gate
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...