×

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் குட்டி யானை அம்முவை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது

*முதுமலை முகாமிற்கு கொண்டு சென்று கரோலில் அடைப்பு

சத்தியமங்கலம் :  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாயை பிரிந்த குட்டியானையை மீண்டும் வனப்பகுதியில் யானைக்கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.  இதையடுத்து குட்டி யானை முதுமலை வளர்ப்பு யானை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு கரோலில் அடைக்கப்பட்டது.  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட பவளக்குட்டை வனப்பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி 3 மாதமே ஆன பெண் குட்டி யானை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி விளை நிலங்களில் சுற்றித்திரிந்தது.

 சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், குட்டி யானையை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். குட்டி யானை தனது தாய் யானையுடன் சேராத நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் உள்ள வனச்சாலையில் கடந்த 3ம் தேதி சோகத்துடன் சுற்றித்திரிந்ததை பார்த்து வனத்துறையினர் குட்டி யானையை மீட்டனர். பின்னர், பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரை வன கால்நடை மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குட்டியானையை பரிசோதித்த வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன், தினமும் 15 லிட்டர் லேக்டோஜென் பால் கொடுத்து பராமரித்து வந்தார்.

அந்த குட்டி யானைக்கு செல்லமாக அம்மு என பெயரிடப்பட்டது. இந்நிலையில், குட்டி யானையை வனப்பகுதியில் உள்ள யானைக்கூட்டத்துடன் சேர்க்குமாறு வனத்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த 9ம் தேதி வனத்துறையினர் குட்டி யானையை பண்ணாரி அருகே உள்ள பேலாரி வனப்பகுதிக்கு கொண்டு சென்று குட்டிகளுடன் சுற்றும் யானைக்கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  ஆனால் அந்த முயற்சி என்ன ஆனது? என்பது குறித்து வனத்துறையினர் எந்த தகவலும் தெரிவிக்காததால்  குட்டி யானை என்ன நிலையில் உள்ளது? என்பதை அறிய முடியாமல் இருந்தது. இந்நிலையில், சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் குட்டி யானையை, கூட்டத்துடன் சேர்ப்பதற்காக கொண்டு சென்ற நிலையில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்? தற்போது குட்டி யானையின் நிலை என்ன? என்று கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், குட்டி யானை அம்மு நிலை குறித்து வனத்துறை அதிகாரிகள் விளக்கமளிக்க உத்தரவிட்டனர். ஆனால் அதற்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை.
இந்நிலையில் வனத்துறையினர் நேற்று அதிகாலை குட்டி யானையை வாகனத்தில் ஏற்றி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், குண்டல்பேட்டை வழியாக நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.

அங்கு வனத்துறை மருத்துவ குழுவினர் குட்டி யானையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர். குட்டி யானைகளை பராமரிக்க ஏற்கனவே தயார் நிலையில் உள்ள கராலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் சத்தியமங்கலம் வனத்துறையினர், முதுமலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் குட்டி யானை கராலுக்குள் அனுப்பப்பட்டது. இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண்லால் கூறுகையில், `குட்டி யானை இயல்பாக வனப்பகுதியில் மற்ற யானைக் கூட்டங்களுடன் சேர்த்து வனப்பகுதியில் விடுவதற்காக தொடர்ந்து முயற்சி செய்தோம். இது ஒரு பரீட்சார்த்த முயற்சிதான்.

ஆனால், 14 நாட்கள் முயற்சித்தும் யானைக்குட்டியை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து, உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில் குட்டி யானையை முகாமில் சேர்த்துள்ளோம். தற்போது, குட்டி யானை நல்ல உடல்நலத்துடன் உள்ளது’ என்றார்.

குட்டி யானையை பராமரித்த 3 வேட்டை தடுப்பு காவலர்கள்

கூடலூர்: முதுமலை வளர்ப்பு முகாமில் கராலில் அடைக்கப்பட்ட குட்டி யானை சத்தியமங்கலத்தில் தன்னை பராமரித்த வேட்டை தடுப்பு காவலர்களை பிரிய மனமில்லாமல் சத்தம்போட்டு கொண்டே உள்ளது. எனவே சத்தியமங்கலத்தில் குட்டி யானையை பராமரித்த 3 வேட்டை தடுப்பு காவலர்கள் சில நாட்கள் குட்டியுடன் இருப்பார்கள் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே ஓசூரில் இருந்து பிடித்து வரப்பட்ட குட்டி யானை ரகுவை பராமரித்து வரும் பாகன் பொம்மன் இந்த யானையையும் பராமரிப்பார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Small Elephant Ammu ,Sathyamangalam Tiger Reserve ,Carol ,Mudhumalai , Carol,satyamangalam,smal elephant,Forest area,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...