×

தமிழக அரசுடன் மருத்துவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு!

சென்னை: காலமுறை ஊதியம் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டு வர நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். காலமுறை ஊதியமும், பிற மாநிலங்களுக்கு நிகராக ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்பது அவர்களது பிரதான கோரிக்கையாக இருக்கிறது. அதுதொடர்பாக ஆய்வு செய்ய அரசு தரப்பில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு அளித்த பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை என மருத்துவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதால் நாள்தோறும் அரசு மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான மக்கள் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது சாமானிய மக்களை பாதிக்கக் கூடிய நிலையை உருவாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து, மருத்துவர்களின் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்விதமான உடன்பாடும் எட்டப்படவில்லை. அரசு பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தாலும், மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை என மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தினாலும், அந்த சமயம் அவர்கள் தரக்கூடிய வாக்குறுதிகள் எழுத்துபூர்வமாக மாற்றப்படுவதில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். எனவே, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் வரை மருத்துவர்களின் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெருதுவர்களின் இந்த முடிவால் நோயாளிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

Tags : talks ,Doctors ,government ,Tamil Nadu ,Strike , Doctors, struggle, resume, negotiation, failure, Government of Tamil Nadu
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...