×

பாம்பன் மீனவ கிராமங்களைச் சூழ்ந்துள்ள மழைநீர்: நோய் பரவும் அபாயம் இருப்பதாக கிராம மக்கள் வேதனை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம்  பாம்பனில் மீனவ கிராமங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. தொடர் மழையால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. மண்டலம், பாம்பன், சின்னப்பாலம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் சின்னப்பாலம் பகுதியில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட மீனவ குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் வருவதால் அப்பகுதிவாழ் மக்களுக்கு நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பகுதி சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பாத்திரங்கள், பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதந்தன.

உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் இன்றி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கடற்கரை ஓரத்தில் வீடுகள் இருப்பதால் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் தத்தளித்தனர். எனவே அப்பகுதியில் உள்ள மழைநீரினை மின்மோட்டார் உதவியுடன் வெளியேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் முழுமையாக சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இரு தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் நேரடியாக அப்பகுதியை பார்வையிட்டார். தொடர்ந்து, தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக முகாமில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.  

இங்கு தங்க வைக்கப்படும் மக்களுக்கு தேவையான தண்ணீர், உணவு மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்பகுதி மக்கள் தங்களுடைய இருப்பிடத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர். இதையடுத்து நேற்றிரவு சுமார் 65 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்டனர். சில மணிநேரம் பெய்த மழைக்கே ஆங்காங்கு மழை நீர் தேங்குவதால் வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழையை சமாளிக்க இப்போதிலிருந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : fishing villages ,Pampan , Pampan, Fisheries Village, Rainwater, Disease, Risk, Pain of People
× RELATED பாம்பன் கடலில் புதிய ரயில் பாலப்பணிகள் தீவிரம்