×

தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை : பழநி இரவிமங்கலத்தில் அகழாய்வு அவசியம்

பழநி : பழநி அருகே இரவிமங்கலம் பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டுமென தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பழநி அருகேயுள்ள இரவிமங்கலம் கிராமத்தில் முதுமக்கள் தாழிகள், எலும்புகள், கலயங்கள், பானைகள், ஓடுகள் போன்றவை உடைந்த நிலையில் வெளிப்படுகின்றன. தற்போது சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் இந்த சின்னங்கள் அருகி காணப்படுகின்ன. 100 ஏக்கர் பரப்பளவில் நெருக்கமாகவும், மீதமுள்ள 100 ஏக்கர் பரப்பளவில் பரவலாகவும் இச்சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த இடத்தை அகழாய்வு செய்தால் பல அரிய தகவல்கள் கிடைக்குமென்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது, ‘இரவிமங்கலம் பகுதியில் பாலாறு- பொருந்தலாறு அணையின் கிளை வாய்க்கால் தோண்டப்பட்ட போதும், புதையல் வேட்கை மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக நிலம் சீரமைக்கப்பட்ட போதும் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இருந்த இந்த சின்னங்கள் சிதைந்து மறைந்து போய்விட்டன. மீதமுள்ள 100 ஏக்கரில் 200க்கும் குறைவான சின்னங்களே தப்பி பிழைத்துள்ளன. இரவிமங்கலம் புதைகுழிகள் உள்ள பகுதிகளில் சங்க காலத்தை சேர்ந்த 3 இரும்பு உருக்காலைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரும்பு அச்சு உலைகள், இரும்பை உருக்க தேவையான சுண்ணாம்பக் கட்டிகள் இன்றளவும் அந்த இடத்தில் காணப்படுகின்றன.

பொதுவாக சங்ககால புதைகுழிகளான கல்வட்டங்கள் வட்ட வடிவிலேயே காணப்படும். ஆனால் இங்கு சங்கத்தின் இறுதி மற்றும் சங்கம் மருவிய காலப்பகுதியை சேர்ந்த சதுர வடிவிலான 2 புதைகுழிகள் உள்ளன. இவ்வளவு சிறப்புமிக்க இரவிமங்கலம் பெருங்கற்கால புதைகுழிகளை அகழாய்வு செய்து தமிழக வரலாற்றுக்கு ஒரு பேரொளியை பாய்ச்சும் நிகழ்வாக இருக்கும். பாண்டியரின் தலைநகரான மதுரையில் இருந்து பாரசீகம், கிரேக்கம், ரோம் போன்ற பேரரசுகளை இணைக்கும் சங்க கால பெருவழிப்பாதையான கொழுமம் பெருவழிப்பாதையின் தென் எல்லையில் இச்சின்னங்கள் காணப்படுவது இவற்றின் கூடுதல் சிறப்பு.

 தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல் உள்ளிட்ட அகழாய்வு களத்திற்கு இணையான மற்றும் அவற்றை விட பெரிய சின்னங்கள் இந்த இரவிமங்கல பெருங்கற்காலச் சின்னங்கள் ஆகும். எனவே, இப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை ஆணையரை வலியுறுத்தி உள்ளோம்’ என்றார்.

Tags : Archaeologists ,Palani , Archaeologists ,Excavation ,Palani ,essential
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது