×

தீபாவளியை முன்னிட்டு தித்திக்கும் திருவில்லிபுத்தூர் பால்கோவா விற்பனை ஜோர்

திருவில்லிபுத்தூர் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை சூடு பிடித்துள்ளது. மதுரைக்கு மல்லிகை, திண்டுக்கல்லுக்கு பூட்டு, சேலத்திற்கு மாம்பழம் போன்று திருவில்லிபுத்தூருக்கு பால்கோவா என்றால் மிகையாகாது. அந்த அளவுக்கு சுவை மிகுந்தது திருவில்லிபுத்தூர் பால்கோவா. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மறக்காமல் பால்கோவா வாங்கி செல்வது வழக்கம்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் பால்கோவா விற்பனை சூடு பிடித்துள்ளது. பால்கோவா மட்டுமின்றி பால்பேடா, பியூர் கோவா, பால்கேக், பால் சுவீட்ஸ் விற்பனையும் களைகட்டி வருகிறது. கடந்த மாதம் திருவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்ததை தொடர்ந்து விற்பனை அமோகமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீபாவளியை முன்னிட்டு விற்பனை மேலும் அதிகரித்துள்ளது.

கடைகளில் கூட்டம் அலைமோதுவதால் மக்கள் காத்திருந்து பால்கோவா மற்றும் இனிப்பு வகைகளை வாங்கி செல்கின்றனர். விற்பனை அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் இரவு-பகலாக பால்கோவா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை அதிகரிப்பது விற்பனையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல கடைகளில் பால்கோவாவிற்கு மொத்தமாக ஆர்டர் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Thiruvilliputtur Palkova ,Sale Jour ,season , deepavali ,deepavali season,Thiruviliputtur ,Palkova
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு