×

ஹரியானா தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை எம்எல்ஏக்கள் டெல்லிக்கு பயணம்: பாஜகவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக அறிவிப்பு

சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை எம்எல்ஏக்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுயேச்சை எம்எல்ஏக்கள் 7 பேரும் அரியானாவில் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும் சுயேச்சை எம்எல்ஏ-க்கள் 7 பேரின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஆளும் பாரதிய ஜனதா 40 இடங்களில் வெற்றி பெற்றது. மெஜாரிட்டிக்கு 6 இடங்கள் குறைவாக கிடைத்ததால் அதிர்ச்சியடைந்த பாஜக மேலிட தலைவர்கள் மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சுயேச்சை எம்எல்ஏ-க்கள் 7 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்க பேரம் பேசப்பட்டு வருகிறது. 7 பேரின் ஆதரவு கடிதம் கிடைத்ததும் ஆளுநர் சத்யதேவ் நாராயனை சந்தித்து ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பாரதிய ஜனதாவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகள் ஓர் அணியில் திரண்டு ஆட்சி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. சுயேச்சை எம்எல்ஏ-க்கள் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்க கூடாது என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளுக்கு எதிராக ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு 40 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 31 இடங்களும் கிடைத்துள்ளன.

துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்திய தேசிய லோக்தளம் கட்சி ஒரு இடத்திலும் ஹரியானா லோஹித் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் 7 இடங்களை கைப்பற்றினர். ஆம் ஆத்மியும் பகுஜன் சமாஜ் கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற 7 சுயேச்சை எம்எல்ஏக்களும் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அதேபோல ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் பாரதிய ஜனதா மூத்த தலைவர்களை சந்தித்து வருகிறார். ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பது குறித்து உயர் தலைவர்களுடன் கட்டார் விவாதித்து வருகிறார். 40 தொகுதிகளை மட்டுமே பாஜக கைப்பற்றி உள்ளதால் ஹரியானாவில் ஆட்சி அமைக்கும் வியூகம் குறித்து கட்டார் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Tags : Haryana ,election trip ,Delhi Independent ,Delhi , Haryana, Assembly elections, Independent MLAs, Delhi, Trip
× RELATED எம்எல்ஏக்கள் வழங்கினர் தொழிலாளர்,...