×

ராதாபுரம் தொகுதி தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கை வழக்கு நவம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை: ராதாபுரம் தொகுதி தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை உத்தரவு நவம்பர் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை (அதிமுக) தொடர்ந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 13ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. 2016 தேர்தலில் இன்பதுரை வெற்றி பெற்றதை எதிர்த்து அப்பாவு (திமுக) சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வாக்கு இயந்திரங்கள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் எண்ணப்பட்டன. வாக்குகளை மீண்டும் எண்ணுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை முறையீடு செய்தார். மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு  சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.அப்பாவுவும், அ.தி.மு.க சார்பில் ஐ.எஸ். இன்பதுரையும் போட்டியிட்டனர். இதில், இன்பதுரை 69,590 வாக்கு, எம்.அப்பாவு 69,541 வாக்கு பெற்றனர். 49 வாக்குவித்தியாசத்தில்  இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அதனை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தபால் வாக்குகளை தாக்கல் செய்ய தெரிவித்ததோடு அவற்றை  எண்ணவும் உத்தரவிட்டது. அதேப்போல் இதில் கடைசி மூன்று சுற்றுக்கான வாக்குப் பதிவுகளை ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். அதன்படி, வாக்குகள் கடந்த வாரம் எண்ணி முடிக்கப்பட்டது.

இதனிடையே, உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக இன்பதுரை தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிமன்ற உத்தரவில், உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய முடியாது. ஆனால் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்கப்பட்டாலும் அதன் முடிவை மட்டும் வெளியிட தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை உத்தரவு நவம்பர் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags : constituency ,Radhapuram ,Supreme Court ,Vote Count , Radapuram, Vote Count, Supreme Court
× RELATED தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர்...