×

களைகட்டும் தீபாவளி பண்டிகை: வேப்பூர் வாரச்சந்தையில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை அமோகம்

கடலூர்: தீபாவளி பண்டிகையை ஒட்டி கடலூர் மாவட்டம் வேப்பூர் வாரச்சந்தையில் 3 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் ஆட்டு சந்தை ஒவ்வொரு வெள்ளி கிழமையும் தவறாமல் நடைபெறும். இந்த பகுதியை சுற்றி கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 4 மாவட்ட மத்தியில் இந்த ஆட்டு சந்தை உள்ளது. சாதாரண வாரச்சந்தையில் கிட்டத்தட்ட 40 முதல் 50 லட்சம் அளவிற்கு மட்டுமே ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் நான்கு மாவட்டத்தை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடுகள் விற்பனைக்காக வாரச்சந்தைக்கு கொண்டு வருவார்கள். இதனால் கூட்டம் அலைமோதும். இந்த ஆடுகளை வாங்குவதற்காக சுற்றியுள்ள நான்கு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகவிலிருந்தும் அதிகளவில் வியாபாரிகள் இங்கு வருவதுண்டு.

இந்த பகுதியை பொறுத்தவரையில் கொடி ஆடு, செம்மறி ஆடு, வெள்ளாடு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். அதுபோலவே இந்த முறையும் கொண்டுவரப்பட்டது. இன்று நள்ளிரவு சுமார் 1 மணியிலிருந்து அதிகாலை 8 மணிக்குள் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அதிகளவிலான ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். அந்த பகுதியில் மழை பொய்த்து போயிருந்தாலும் இதுபோல் ஆடு, கோழிகள் வளர்ப்பில் தான் அதிகளவில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற பண்டிகைகால விற்பனைக்காகவே இந்த வகை ஆடுகள் வளர்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு 3 கோடி ரூபாய் அளவிற்கு இந்த ஆடுகள் விற்கப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Diwali Festival , Diwali, Vepur weekend market, 3 crores, goats, sales
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...