சிவசேனா நெருக்கடி: பாஜக தலைவர்களுடன் தேவேந்திர பட்னாவிஸ் இன்று மும்பையில் ஆலோசனை

மும்பை: மராட்டிய மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்து கொண்டாலும் முதலமைச்சர் பதவியை கேட்டு சிவசேனா நெருக்கடி கொடுப்பதால் பாஜகவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவின் தேர்தல் முடிவடைந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி இருந்தாலும் கூட தற்போது பாஜகவிற்கு புதிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜகவிற்கு 105 இடங்கள் கிடைத்திருக்கின்றன. எனவே கடந்த தேர்தலில் 122 இடங்களில் வென்றிருந்த பாஜக இந்தமுறை 17 இடங்களை இழந்திருக்கிறது. அதேபோன்று சிவசேனா 56 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. இரண்டு கட்சிகளும் சேர்ந்து 200க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்று கருத்துகணிப்புகள் தெரிவித்திருந்தன. அதேபோன்று 164 இடங்களில்போட்டியிட்ட பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆட்சி அமைக்க தேவையான 145 இடங்களை பெற முடியாத சூழ்நிலையில் சிவசேனாவுடன் இணைந்து தான் கூட்டணி அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

தேர்தல் முடிவுகள் வரும்வரை அமைதி காத்திருந்த சிவசேனா தற்போது அதிரடியாக கூட்டணியில் இடம் கேட்டும், ஆட்சியில் பங்கு வேண்டும், முதலமைச்சர் பதவி வேண்டும், முதல் இரண்டரை ஆண்டுகள் தங்களது ஆட்சி இருக்க வேண்டும் என்று நிபந்தனையை விதித்துள்ளது. தற்போது பாஜக கட்சிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாகவே இதுபோன்று புதிய ஒப்பந்தத்தை போடப்பட்டதாகவும் அதன்படியே தற்போது தங்கள் கேட்பதாகவும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக மேலிட தலைவர்களுடன் தேவேந்திர பட்னாவிஸ் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக இன்று பாஜக மூத்த தலைவர்களுடன் மும்பையில் ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories:

>