×

எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்காக 38 சென்னை பள்ளிகளில் மாண்டிசோரி கல்வி முறைக்கான உட்கட்டமைப்பு வசதி: மாநகராட்சி திட்டம்

சென்னை: எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்காக 38 சென்னை பள்ளிகளில் மாண்டிசோரி கல்வி முறைக்கான உட்கட்டமைப்பு வசதி உருவாக்க  மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 32 மேல்நிலை பள்ளிகள், 37 உயர்நிலைப் பள்ளிகள், 93 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் அடங்கும். இந்த பள்ளிகளில் 85 ஆயிரம் மாணவர்கள்  பயின்று வருகின்றனர். மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துதல், ஆசிரியர்களின் கல்வி தரத்ைத உயர்த்துதல் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளில் பயிலும் குழந்தைகளுக்காக 38 சென்னை பள்ளிகளில் மாண்டிசோரி முறை கல்விக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கல்வித் துறை துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன், உதவி கல்வி அதிகாரிகள் ஆகியோர் கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.  இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது :200க்கு மேற்பட்ட சென்னை பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் உள்ளன. இவற்றில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது 15க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 50க்கும் மேற்பட்ட மாண்டிசோரி முறை  வகுப்பறைகள் உள்ளன. இதை தொடர்ந்து, மீதமுள்ள பள்ளிகளில் மாண்டிசோரி முறை வகுப்பறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி 73 ஆசிரியர்களுக்கு மாண்டிசோரி கல்வி முறை தொடர்பாக பயிற்சி  அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆசிரியர்களை கொண்டு 38 பள்ளிகளில் மாண்டிசோரி வகுப்பறைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உபகரணங்கள் விரைவில் வாங்கப்பட உள்ளன. இதன்பிறகு இந்த பள்ளிகளில் மாண்டிசோரி முறையில்  கல்வி கற்பிக்கப்படும். தொடர்ந்து, அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Montessori ,schools ,children ,Chennai ,UK ,LKG , LKG, UK ,kids,Madras Schools,education , corporation
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...