×

தரமணி தந்தை பெரியார் நகரில் வீடுகள் அருகே கழிவுநீர் தேக்கம்: துர்நாற்றத்தால் மக்கள் அவதி

வேளச்சேரி: சென்னை மாநகராட்சி 180 வார்டுக்குட்பட்ட தந்தை பெரியார் நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த  20 ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது.இந்த பகுதியில் பாதாள சாக்கடையில் கடந்த 20 நாட்களுக்கு முன் அடைப்பு ஏற்பட்டது. அதனால் பாதாள சாக்கடை தொட்டி மூடிகள் வெளியே கழிவுநீர் வெளியேறி தெருக்களில் குளம்போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக பாரதிநகர்  பகுதிக்குட்பட்ட யமுனா தெரு மற்றும் தந்தை பெரியார் நகருக்கு உட்பட்ட அண்ணா தெரு ஆகிய தெருக்களில் கழிவுநீர் குளம்போல் தேங்குகிறது. இந்த இரண்டு தெருக்களும் இந்த பகுதியில் உள்ளவர்கள் மெயின் சாலைக்கு செல்ல வேண்டும்  என்றால் இந்த இரு சாலைகள் வழியாக தான் செல்ல வேண்டிய நிலை  உள்ளது.   இந்த சாலைகளில் முழங்கால் அளவுக்கு கழிவுநீர் தொடர்ந்து தேங்கி வருகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த கழிவுநீர் மாதக்கணக்கில் சாலையில்  தேங்குவதால் இந்தப் பகுதியில் உள்ளவர்கள் வேலைக்கு செல்லும்போதும், வெளியிடங்களுக்கு செல்லும்போதும்,   மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போதும் இந்த கழிவுநீரில் நடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால் கால்களில்  சேற்றுப்புண் ஏற்படுவது, மேலும் தோல் சம்பந்தமான நோய்களும் ஏற்படுகிறது.

மேலும் இதிலிருந்து வரும் துர்நாற்றம் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. சிறிது மழை பெய்தாலும் இந்த கழிவுநீர் சாலையில் வழிந்தோடி மற்ற தெருக்களிலும் தேங்குகிறது. தாழ்வான வீடுகளிலும் நுழைந்து விடுகிறது. இதனால் இந்த பகுதியில்  சுகாதாரக் கேடு ஏற்பட்டுகிறது. மேலும் கழிவு நீரிலிருந்து கொசு உற்பத்தியாகி அந்த கொசுக்கள் கடிப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. வரும் காலம் மழைக்காலம் என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இந்த பகுதியில் பெரும்பாலும் ஏழை மக்களே வசிக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாகவே இந்த பகுதியில் தொடர்ந்து எங்காவது ஒரு இடத்தில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு  சாலைகளில் கழிவுநீர் வழிந்து ஓடுவது, குளம்போல் தேங்குவது என்பது வழக்கமாக உள்ளது. அதனால் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் பாதாள சாக்கடை பைப்புகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் பாதாளச் சாக்கடை  தொட்டிகள் தொட்டி மூடிகள் வழியே வழிந்து ஓடுகிறதா? அல்லது கழிவு நீரேற்று நிலையத்தில் உள்ள நீர் இறைக்கும் மோட்டார்களின் திறன் குறைவால் கழிவுநீர் வெளியேறுகிறதா? என்பதைக் கண்டறிந்து இதற்கு நிரந்தர தீர்வு காண  வேண்டும்” என தெரிவித்தனர்.   




Tags : father sewers ,Tharamani ,houses ,Periyar ,stench. Dharammani ,Periyar Sewage Stacking Houses , Dharammani, father , Periyar, Houses,stench
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...