×

தள்ளுபடியுடன் களைகட்டுது பண்டிகைக்கால விற்பனை

பண்டிகை வந்தாலே ஷாப்பிங் களைகட்ட துவங்கிவிடும். அதிலும் தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை போனஸ் போன்றவற்றால் மக்களிடம் பணப்புழக்கம் தாராளமாக காணப்படும். இதனால் ஆடைகள் மட்டுமின்றி, வீட்டு உபயோக  பொருட்களுக்கும் நிறுவனங்கள் அதிரடி தள்ளுபடி அளிக்கின்றன. முன்பு நகை, புடவை கடைகளில் மட்டுமே இருந்த தள்ளுபடி இருந்தது. இப்போது பல வீட்டு பயன்பாட்டு பொருட்களுக்கும் பரவி உள்ளது.  பெரிய நகரம், சிறிய நகரம் என எந்த நகரமும் இதற்கு விதிவிலக்கல்ல. வேறுபாடு, பாகுபாடும்  கிடையாது. குறிப்பாக, ஜவுளி விற்பனை நிறுவனங்களுக்கு இது கொண்டாட்டமான காலக்கட்டம். ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம், 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை விலை குறைப்பு மற்றும் இன்னபிற சலுகை என  அமர்க்களப்படுத்தி விடுகிறார்கள். ஜவுளி கடைகள் மட்டுமின்றி, கார் விற்பனை நிறுவனங்களும் தள்ளுபடிகளை அளிக்கின்றன.

 பொதுவாக ஜவுளி மற்றும் சில்லரை வர்த்தக நிறுவனங்களுக்கு இதர மாதங்களைவிட பண்டிகை மாதங்களில் விற்பனை இரண்டு மடங்காக அதிகரிக்கும். தள்ளுபடி சலுகைகள் விற்பனை அதிகரிப்புக்கு மிக முக்கிய காரணமாக அமைகின்றன.விற்பனை பிரம்மாண்டமாக இருப்பதால் இதற்காகவே தனியாக கொள்முதல் செய்வதும் நடக்கிறது. ஜவுளி விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் சலுகை போல, அவர்கள் கொள்முதல் செய்யும் இடத்திலும், கொள்முதல்  சலுகைகளை கொடுக்கிறார்கள். இதை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு மாற்றி விடுகின்றனர். இதுமட்டுமின்றி பல நிறவனங்கள் தங்களது லாப வரம்பில் சிறிதளவு குறைத்துக்கொள்ளவும் செய்கின்றன.  20 சதவீதத்துக்கு மேல் இருக்கும் தள்ளுபடிகளில் அப்டேட் பேஷனை எதிர்பார்க்க முடியாது. அதாவது, லேட்டஸ்ட் டிசைன்களுக்கு  தள்ளுபடி கிடைக்காது. அல்லது குறைவான தள்ளுபடிதான் கிடைக்கும். பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி., ரைஸ் குக்கர், இன்டெக்‌ஷ்ன் ஸ்டவ் என வீட்டு உபயோக பொருட்களுக்குகூட தள்ளுபடி எதிர்பார்க்கிறோம். இதற்கு ஏற்ப மின்னணு  பொருட்களை விற்கும் நிறுவனங்களும் இந்த தீபாவளி சீசனில் கல்லா கட்டுகின்றன. விலை குறைப்பு, ஜீரோ சதவீத வட்டி, தவணையில் வாங்க சலுகைகள் என பல சலுகைகளை அளிக்கின்றன. மொபைல் போன் போன்ற மின்னணு  பொருட்களுக்கும் தள்ளுபடிகள் உண்டு. அதிரடி தள்ளுபடி மற்றும் புதிய ஜவுளி ரகங்கள், புதிய வீட்டு உபயோக பொருட்களால் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. என்ன, நீங்களும் தள்ளுபடி சலுகையில் வாங்க  கிளம்பிட்டீங்கதானே.



Tags : season , Sale , festive ,discounts
× RELATED 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள்...