×

பிட்ஸ்

‘அரைநாள் கிங் மேக்கர்’

அரியானா சட்டப்பேரவை தேர்தலில் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ‘ஜனநாயக ஜனதா கட்சி’ 10 இடங்களை பிடித்துள்ளது. இதன் மூலம், இம்மாநிலத்தில் அடுத்து ஆட்சி அமைக்கும் கட்சி எதை என்பதை தீர்மானிக்கும் ‘கிங் மேக்கராக’ துஷ்யந்த் இருப்பார் என கருதப்பட்டது. இதை அவருடைய கட்சித் தொண்டர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர். ஆனால், இந்த அதிர்ஷ்டம் அரைநாள் கூட அவருக்கு நீடிக்கவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற 7 சுயேச்சை எம்எல்ஏ.க்களையும், நேற்று மாலையே டெல்லிக்கு பாஜ தூக்கிச் சென்று விட்டதால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை அதற்கு கிடைத்து விட்டது. இதனால், துஷ்யந்தும், அவருடைய கட்சியினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இவர், முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் கொள்ளுப்பேரனும், அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகன் வழிப்பேரனும் ஆவார்.

நம்பிக்கையுடன் ஹூடா

அரியானாவில் நேற்று பிற்பகல் காங்கிரஸ் 32 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா, “ஜேஜேபி உள்ளிட்ட பிராந்திய கட்சிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். பாஜவுக்கு எதிரான  தீர்ப்பு இந்த தேர்தலில் எதிரொலிக்கும்.  நாங்கள் பல்வேறு வாய்ப்புக்களை கொண்டுள்ளோம். நாங்கள்  வலுவான ஆட்சி அமைப்போம்.  பாஜவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்” என்றார்.

ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தோல்வி

அரியானாவின் கய்தால் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தோல்வியை தழுவினார். பாஜ வேட்பாளர் லீலா ராமிடம் 567 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வி அடைந்தார்.

சிவசேனாவுடன் கூட்டணி கிடையாது

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில், “தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இதர கூட்டணி கட்சிகள் தேர்தல் முடிவுக்கு பின்னர் கூட்டணி குறித்து ஆலோசிக்கும். ஆனால் சிவசேனாவுடன் நாங்கள் கூட்டணி வைத்து கொள்ள மாட்டோம். எதிர்க்கட்சிகள் கடினமாக உழைத்தன. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சிறப்பாக பணியாற்றின. அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆட்சி அதிகாரம் வரும், போகும். ஆனால் ஒரு காரணத்திற்காக உறுதியுடன் இருப்பது மிகவும் முக்கியம். மக்கள் காட்டியுள்ள அன்புக்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்” என்றார்.



Tags : Bits
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...