×

காங்கிரஸ், தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி பாஜ, சிவசேனாவில் சேர்ந்த 19 பேர் தோல்வி

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி பாஜ மற்றும் சிவசேனாவில் சேர்ந்த 19 பேர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்தனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் இருந்து 35 தலைவர்கள் பாஜ மற்றும் சிவசேனாவில் இணைந்தனர். இந்த 35 பேருக்கும் தேர்தலில் போட்டியிட பாஜ மற்றும் சிவசேனா சார்பில் வாய்ப்பளிக்கப்பட்டது. இவர்களில் 19 பேர் தோல்வியை தழுவியுள்ளனர். தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி சிவசேனாவில் சேர்ந்த ஜெய்தத் சிர்சாகர் பீட் தொகுதியில் போட்டியிட்டு தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் சிர்சாகரிடம் தோல்வியடைந்தார். தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி சிவசேனாவில் சேர்ந்த திலீப் சோபல் பர்ஷி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ராஜேந்திர ராவுத், திலீப் சோபலை தோற்கடித்தார். இந்த தொகுதியில் ராஜேந்திர ராவுத்துக்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரசில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்த பாவுசாகேப் காம்ப்ளே ராம்பூர் தொகுதியில் தோல்வியடைந்தார். தேசியவாத காங்கிரசில் இருந்து சிவசேனாவில் இணைந்து மான-கட்டாவ் தொகுதியில் போட்டியிட்ட சேகர் கோரே தோல்வியைத் தழுவினார். சிவசேனாவில் இணைந்த மற்றொரு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ரேஷ்மி பெஹல் கர்மாலா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதே போன்று தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி சிவசேனாவில் சேர்ந்த விஜய் பாட்டீல் வசாய் தொகுதியிலும், சஞ்சய் கோகடே மாதா தொகுதியிலும் தோல்வியைத் தழுவினர். காங்கிரசில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்த திலீப் மானே சோலாப்பூர் மத்திய தொகுதியிலும், நாக்நாத் சிர்சாகர் மொகோல் தொகுதியிலும், நிர்மலா காவித் இகத்புரி தொகுதியிலும் தோல்வியைத் தழுவினர்.

இவர்கள் தவிர சிவசேனாவில் இணைந்து நாலா சோபாரா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி பிரதீப் சர்மாவும் தோல்வியைத் தழுவினார். தேசியவாத காங்கிரசில் இருந்து பாஜ.வுக்கு தாவிய வைபவ் பிச்சாத் அகோலா தொகுதியில் தோல்வியடைந்தார். காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு தாவிய ஹர்ஷ்வர்தன் பாட்டீல் இந்தாப்பூர் தொகுதியிலும், தோல்வியடைந்தனர். இதுபோன்று மொத்தம் 19 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

Tags : Baja ,Nationalist ,Shiv Sena ,Congress ,Congress 19 Bjp , 19 Bjp and Shiv Sena candidates , Congress and Nationalist Congress
× RELATED சிவசேனா முதல்பட்டியல் உத்தவ் இன்று ரிலீஸ்