×

களம் கண்ட முதல் தேர்தலிலேயே முத்திரை பதித்த தாக்கரே வாரிசு

தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல்முறையாக தேர்தல் களம் கண்ட ஆதித்ய தாக்கரே மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் பேரனும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கட்சியின் இளைஞரணியான யுவசேனா தலைவராக பொறுப்பு வகித்து வரும் ஆதித்ய தாக்கரே, இந்த தேர்தலில் தனது தந்தை உத்தவ் தாக்கரேயை விட கூடுதல் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.
இதற்கிடையே, ஒர்லி தொகுதி வேட்பாளராக ஆதித்ய தாக்கரே அறிவிக்கப்பட்டார். ஒர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரேக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுரேஷ் மானே களமிறக்கப்பட்டார். மாநிலத்தின் பல பகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய ராஜ் தாக்கரே மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா, ஒர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரேக்கு ஆதரவு தெரிவித்தது. ஆதித்ய தாக்கரே, சுரேஷ் மானே மற்றும் வஞ்சித் பகுஜன் அகாடி சார்பில் கவுதம் கெய்க்வாட் தவிர 13 பேர் ஒர்லி தொகுதியில் போட்டியிட்டனர். 2,83,526 வாக்காளர்களை கொண்ட ஒர்லி தொகுதியில் 1,38,522 வாக்குகள்(48.86 சதவீதம்) பதிவானது. இதில் ஆதித்ய தாக்கரே 79,299(70.32 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இதர 12 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். மாநில அளவில் ஆதித்ய தாக்கரே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தாக்கரே குடும்பத்தில் இருந்து இதுவரை யாரும் தேர்தலில் போட்டியிட்டதில்லை. சிவசேனாவை தொடங்கிய போது தான் ஒருபோதும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ராஜ்தாக்கரேஅறிவித்திருந்தார். அந்த கொள்கையில் அவர் கடைசி வரை உறுதியுடன் இருந்தார். அவரது வழியை பின்பற்றி உத்தவ் தாக்கரேயும் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. சிவசேனாவில் இருந்து பிரிந்து மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனாவை தொடங்கி நடத்தி வரும் ராஜ் தாக்கரேயும் இதுவரை தேர்தல் களத்தில் இறங்கியதில்லை. அந்த வகையில் தாக்கரே குடும்பத்தில் இருந்து தேர்தல் களம் கண்ட முதல் நபர் ஆதித்ய தாக்கரேதான். முதல் தேர்தலிலேயே அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று முத்திரை பதித்துள்ளார். அவரது இந்த மகத்தான வெற்றியை நேற்று முழுவதும் சிவசேனாவினர் உற்சாகமாக கொண்டாடி தீர்த்தனர்.


Tags : Thackeray ,heir ,election , Thackeray, first election
× RELATED சொல்லிட்டாங்க…