அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு 500க்கு மேல் கொண்டுவர வேண்டாம் : வைரலான ‘வாட்ஸ் அப்’ தகவல்

திருவண்ணாமலை: லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பு தீவிரமாகி உள்ளதால், ₹500க்கு மேல் அலுவலகத்துக்கு கொண்டுவர வேண்டாம் என வைரலான ‘வாட்ஸ் அப்’ தகவல் பரபரப்பு ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் அன்பளிப்பு மற்றும் பரிசு பொருட்கள் என்ற பெயரில் லஞ்சம் பெறுவதை தடுக்க, லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ₹500க்கு மேல் பணம் கொண்டுவர வேண்டாம், லஞ்ச ஒழிப்புத்துறையினர் கவனம், அரசு அலுவலகங்களை நோக்கி திரும்பிவிட்டது. தமிழகத்தில் 5 ஒன்றியங்களில் சோதனை நடந்திருக்கிறது என ‘வாட்ஸ் அப்’ குழுக்களில் வைரலாக தகவல் பரவியது.

மேலும், அரசு அலுவலகங்களுக்கு 500க்கு மேற்பட்ட தொகையை கொண்டுசெல்வது ஆபத்தை விளைவிக்கும் என அதில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த தகவல், அரசுத் துறை ஊழியர்கள் இடம் பெற்றுள்ள ‘வாட்ஸ் அப்’ குழுக்களில் கிடு கிடுவென பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திருவண்ணாமலை, போளூர், செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் 2 நாட்களாக முகாமிட்டிருந்தனர். ஆனாலும், முன்கூட்டியே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல்கள் கசிந்து விடுவதாலும், ‘வாட்ஸ் அப்’ குழுக்களில் எச்சரிக்கை தகவல் பரவியதாலும் கையும் களவுமாக யாரையும் பிடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும், தீபாவளி பண்டிகைக்கு முன்பு கடைசி பணி நாளான இன்று, பரிசு பொருட்கள் என்ற பெயரில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுகிறதா? என லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

>