×

வாட்ஸ்அப்’பில் அவதூறு பரப்பியதால் மனவேதனை சென்னை சினிமா ஒளிப்பதிவாளர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை : ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு

ஜோலார்பேட்டை: வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியதால் மனவேதனை அடைந்த சென்னையைச் சேர்ந்த சினிமா ஒளிப்பதிவாளர் ஜோலார்பேட்டை அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக மனைவி புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, சென்னீர்குப்பம், லீலாவதி நகர், விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர்  சசிகுமார்(47). இவர் சினிமா கேமரா ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ராகவி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 9ம் தேதி காலை பணி காரணமாக வெளியே செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற சசிகுமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே ஏரியில் உள்ள ஒரு மரத்தில் சசிகுமார் சடலம் தூக்கில் தொங்கியபடி கிடந்தது. தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். அப்போது. அவரது பாக்கெட்டில் இருந்த பர்சில் ஆதார் கார்டும், 22ம் தேதி இரவு பெங்களூருவில் இருந்து ஆம்பூர் வரை செல்லும் ரயில் டிக்கெட்டும் இருந்தது. தொடர்ந்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தகவல் அறிந்து சசிகுமாரின் மனைவி ராகவி மற்றும் உறவினர்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையம் வந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ‘சென்னையில் உள்ள ஒரு தனியார் ஸ்டூடியோவில் சினிமா ஒளிப்பதிவாளராக சசிகுமாரும், மகேஷ் என்பவரும் வேலை செய்து வந்தும், ஒரு வேலைக்காக மகேஷிடம், சசிகுமார் வாடகைக்கு கேமரா எடுத்துச்சென்ற விவகாரத்தில்  இருவருக்கும் தகராறு இருந்து வந்ததும் தெரிந்தது.

இந்நிலையில் ஒளிப்பதிவாளர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் சசிகுமார் குறித்து, மகேஷ் அவதூறாக பதிவிட்டாராம். மேலும், கேமரா தொடர்பாக சசிகுமாரை, மகேஷ் மிரட்டி வந்தாராம். இதுதவிர சென்னை விருகம்பாக்கம் போலீசில் சசிகுமார் மீது மகேஷ் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இதனால் அவமானம் அடைந்த சசிகுமார் கடும் மன வேதனையில் இருந்தாராம். இந்நிலையில், சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற சசிகுமார், அங்கிருந்து ஆம்பூர் வரை ரயில் டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் நள்ளிரவில் ஜோலார்பேட்டையில் இறங்கிய அவர், மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து, அவரது மனைவி ராகவி நேற்று ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில், கணவர் சாவில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Mana Vedanna ,suicide ,Chennai ,cinematographer ,Jolarpet ,Madras , Madras cinematographer, commits suicide ,Jolarpet
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை