×

ஒகேனக்கல்லுக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வருகை மேட்டூர் அணையில் இருந்து 45,000 கனஅடி தண்ணீர் திறப்பு

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், . ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதை தொடர்ந்து, காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் தடை நீடிக்கிறது.

அதேபோல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக இருந்த  நீர்வரத்து, இரவு 10 மணியளவில் 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை 47 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணை முழுமையாக நிரம்பியுள்ளதால், அணையில் இருந்து சுரங்க மின்நிலையம் மற்றும் அணை மின்நிலையம் வழியாக விநாடிக்கு 22,500 கனஅடி தண்ணீரும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 22,500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 120.20 அடியாகவும், நீர் இருப்பு 93.79 டிஎம்சியாகவும் உள்ளது.

அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி கரையோரங்களில் வருவாய்த்துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Metroor Dam ,Oktanekal Dam ,Oyenakkal , Fifty thousand cubic feet,water , Oyenakkal
× RELATED கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு...