×

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜ-சிவசேனா கூட்டணி ஆட்சி: இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி, அமைச்சரவையில் 50 சதவீத இடம் கேட்டு உத்தவ் தாக்கரே பிடிவாதம்

* அரியானா மாநிலத்தில் இழுபறி

மும்பை: மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ - சிவசேனா கூட்டணி 162 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆனால், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியையும், அமைச்சரவையில் சரிபாதி இடங்களையும் கேட்டு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பிடிவாதம் பிடிப்பதால், ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், அரியானாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் கடந்த 21ம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று காலை எண்ணப்பட்டன. மகாராஷ்டிராவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பெரும்பாலான தொகுதிகளில் பாஜ - சிவசேனா கூட்டணி வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர். ஆனால், மதியத்துக்கு பிறகு நிலைமை மாறியது. பின்தங்கியிருந்த பல இடங்களில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் முன்னணி பெறத் தொடங்கினர்.

இந்த தேர்தலில் பாஜ-சிவசேனா கூட்டணி 180 முதல் 190 இடங்களை கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால், இதை காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பொய்யாக்கியது. இறுதி நிலவரப்படி மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜ-சிவசேனா கூட்டணிக்கு 162 இடங்கள் கிடைத்தது. இதில், பாஜ 105 தொகுதிகளையும், சிவசேனா 57 தொகுதிகளையும் கைப்பற்றின. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 99 இடங்கள் கிடைத்தன. இதில், காங்கிரஸ் 46 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்களிலும் வெற்றி பெற்றன. ராஜ்தாக்கரேயின் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா ஒரு இடத்தில் (கல்யாண் ரூரல்) வெற்றி பெற்றது. இதர கட்சிகள் 28 இடங்களில் வெற்றி பெற்றன. 160 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் பாஜ-சிவசேனா கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஆனால், இக்கூட்டணி ஆட்சி அமைப்பதில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியையும், அமைச்சரவையில் சரிபாதி இடங்களையும் கேட்டு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பிடிவாதம் பிடிக்கிறார்.
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மும்பையில் கட்சி அலுவலகத்தில் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், ‘‘மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு செய்து கொண்ட போதே சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் பாஜ- சிவசேனா இடையே தொகுதி உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. அப்போது 50-50 பார்முலாப்படி அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது என அமித் ஷா எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தருணம் இது. இந்த விஷயத்தில் சிவசேனா

எந்த சமரசமும் செய்து கொள்ளாது. அடுத்த முதல்வராக யார் பொறுப்பேற்பது என்பது குறித்து அமித் ஷாவுடன் கலந்து பேசிய பிறகு முடிவு செய்யப்படும்’’ என்றார். உத்தவ் தாக்கரே கூறும் 50-50 பார்முலா என்பது, முதல்வர் பதவியை இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் வகிப்பதும், அமைச்சரவையில் சரிபாதி பதவிகளை பகிர்ந்து கொள்வதாகும். இந்த கோரிக்கையை உத்தவ் தாக்கரே மீண்டும் வலியுறுத்தி இருப்பதால் பாஜ.வுக்கு பெரும் தர்மச்சங்கடம் ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேயின்  இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் பாஜ இல்லை. அதேவேளையில், சிவசேனாவின் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்படக்கூடும் எனத் தெரிகிறது.

அரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வந்தது. இங்குள்ள 90 பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், பாஜ. 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும் பிடித்துள்ளன. துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும், பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் 2 இடங்களிலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால், எந்த கட்சி–்க்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இங்கு இழுபறி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள பாஜ., இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது.

இம்மாநிலத்தில் முதல்வர் கட்டார்  அமைச்சரவையில் இடம் பெற்ற 10 அமைச்சர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 8 பேர்  தோல்வியை தழுவினர். சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ், உள்துறை அமைச்சர்  பன்வாரி லாலும் மட்டுமே வெற்றி பெற்றனர். முதல்வர் கட்டார், கர்னால்  தொகுதியில் வெற்றி பெற்றார்.தேர்தல் முடிவு குறித்து பாஜ தலைவர்  அமித் ஷா விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், ‘அரியானாவில் ஆட்சி அமைக்க பாஜ  உரிமை கோரும். மகாராஷ்டிராவில் பாஜ-சிவசேனா கூட்டணி மீது நம்பிக்கை வைத்து  வாக்களித்த மக்களுக்கு நன்றி,’ என்று கூறியுள்ளார்.

7 சுயேச்சைகளையும் டெல்லிக்கு ‘தூக்கியது’ பாஜ
அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜ 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும், ஜேஜேபி 9 இடங்களையும் சுயேச்சைகள் உட்பட மற்றவர்கள் 10 இடங்களையும் பிடித்துள்ளனர். இதில் மொத்தம் உள்ள 7 சுயேச்சைகளுக்கு இந்த தேர்தலில் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. இவர்களின் ஆதரவை பெற்றாலே பாஜ ஆட்சி அமைத்துவிட முடியும். இதனால், பாஜ தலைவர்கள் இந்த 7 சுயேச்சைகளையும், நேற்று மாலை டெல்லிக்கு அழைத்து சென்றுவிட்டனர். அவர்களிடம் பாஜ.வுக்கு ஆதரவு கேட்டு பேச்சு நடப்பதாக தெரியவந்துள்ளது.

காங்.வேட்பாளர் வெற்றியை தோல்வியாக்கிய அமைச்சர் : பிரியங்கா டுவீட்
உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை அழிப்பதற்கு பாஜ முயற்சிக்கிறது என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து பிரியங்கா தனது டிவிட்டர் பதிவில், “பாஜ அகந்தையுடன் செயல்படுகின்றது. காங்கோ வாக்கு எண்ணும் மையத்தில் மக்களின் முடிவை மாற்றுவதற்கு பாஜ முயற்சிக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்குகளை குறைத்து கூறும்படி தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு பாஜ அமைச்சர் 5 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இது ஜனநாயகத்தை இழிவுப்படுத்தும் செயலாகும். இதனால் பாஜ வேட்பாளர் 5,000 ஓட்டில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்” என்றார்.

டிக்டாக் வேட்பாளர் தோல்வி
அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஆதம்பூர் தொகுதியில் பாஜ சார்பில் டிக்டாக் பிரபலமான சோனாலி போகத் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூத்த தலைவர் குல்தீப் பிஸ்னோய் போட்டியிட்டார். இவர் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் இளைய மகனாவார். குல்தீப், சோனாலியை காட்டிலும் 29,471 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

‘அரசு-மக்கள் இடையே பெரும் இடைவெளி’: பாஜ ஒப்புதல்
பாஜவின் தேசிய பொதுசெயலாளர் விஜயர்வர்கியா கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘அரியானாவில் கடந்த 5 ஆண்டுகளில் பாஜ அரசு சிறப்பான பணிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் வாக்காளர்கள் மற்றும் பாஜ அரசுக்கு இடையே சரியான தொடர்பின்றி இடைவெளி உள்ளது. எனவே தான் அரசின் செய்திகளை மக்களிடையே கொண்டு செல்ல முடியவில்லை” என்றார்.

Tags : alliance ,Shiv Sena ,BJP ,Maharashtra BJP ,Maharashtra , Maharashtra, Baja-Shiv Sena Alliance, Uddhav Thackeray
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை